துஆ எப்போது ஏற்கப்படும்? நேரங்களும் காரணங்களும்

துஆ ஏற்கப்படும் என்று அதிகம் எதிர்பார்க்கப்படும் நேரங்களும் நிலைகளும்.

1 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : 'ஓர் அடியான் ஸுஜூத் செய்து கொண்டிருக்கும் நிலையில்தான் தனது இரட்சகனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான், ஆகவே அந்நிலையில் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள்'.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு அடியான் அவன் ஸுஜூதில் இருக்கும் நிலையில் தனது இரட்சகனுக்கு மிகவும் நெருக்கமானவனாக உள்ளான் என்பதை தெளிவு படுத்துகிறார்கள். தொழும் ஒருவர் தனது மேனியின் மிகவும் உயர்ந்த மேன்மைமிக்க பகுதியான நெற்றியை அல்லாஹ்வுக்கு பணிந்து, அடக்கமாக தரையில் வைக்கும் இடம் அவன் ஸுஜூதில் இருக்கும் நிலையாகும்.

சொல்லினாலும் மற்றும் செயலினாலும் அல்லாஹ்வுக்கு பணிந்து அடக்கமாக இருக்கும் நிலை ஸுஜூதில் காணப்படுவதால் அந்நிலையில் இருக்கும் வேளை அதிகம் பிரார்தனை புரியுமாறு நபியவர்கள் கட்டளைப் பிரப்பித்துள்ளார்கள்.

பயன்கள்

  • அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பது அல்லாஹ்வுடனான நெருக்கத்தை அதிகரிக்கிறது.
  • ஸுஜூதில் அதிகம் பிராரத்திப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். அது துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் ஒன்றாகும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைக் கேட்டதாக அம்ர் இப்னு அபஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னிடம் கூறியதாக அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : ((இரவின் கடைசிப் பகுதியில் இரட்சகனான அல்லாஹ் அடியானுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளான். இந்நேரத்தில் அல்லாஹ்வை நினைவுகூருகிற அடியார்களில் நீயும் ஒருவனாக இருக்கமுடியுமென்றிருந்தால் அப்படி இருந்து கொள்வீராக)).

இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள் தரம்: சரியானது

விளக்கம்

இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதியில் இறைவன் தன் அடியானுக்கு மிக அருகில் வருவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். முஃமினே ! - இந்த நேரத்தில் அல்லாஹ்வைத் தொழுது அவனை நினைவு கூறி அவனிடம் பாவமன்னிப்புத் கோருபவர்களில் ஒருவராக உமக்கு இருக்க முடியுமென்றிருந்தால் அதற்கு எத்தனிப்பீராக. ஏனெனில் இந்நேரத்தை பயன்படுத்தி அதில் நல்லமல்களில் ஈடுபடுவது மிகவும் தேவையான ஒரு விடயமாகும்.

பயன்கள்

  • முஸ்லிம்கள் இரவின் இறுதிப் பகுதியில் திக்ர் -அல்லாஹ்வை நினைவு கூற- செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டிருத்தல்.
  • திக்ர், துஆ மற்றும் தொழுகை ஆகியன அவற்றின் சிறப்புகள் அவை செய்யும் நேரங்களின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
  • 'ஒர் அடியானுக்கு இறைவன் மிக நெருக்கமானவன்' என்ற நபியின் கூற்றுக்கும் 'ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிக நெருக்கமானவன் அவன் ஸஜ்தா செய்யும் போதுதான்' என்ற கூற்றுக்கும் இடையிலான வித்தியாசம்-வேறுபாடு- பற்றி மைரக் குறிப்பிடுகையில்: இங்கே குறிப்பிடப்பட்ட ஹதீஸானது இறைவன் அடியானுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரத்தை விபரிக்கிறது அது நள்ளிரவாகும். இரண்டாவது ஹதீஸ் அடியான் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நிலைகளை விபரிப்பதாகும். அவ்வாறான நிலைகளுள் ஸஜ்தாவும் ஒன்றாகும் என்பதே இதன் கருத்தாகும் என்கிறார்.

HadeethEnc.com இல் படிக்கவும்

3 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆ தட்டப்படமாட்டாது.

இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள் தரம்: சரியானது

விளக்கம்

இங்கு நபியவர்கள், அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆவின் சிறப்பைத் தெளிவுபடுத்தும் விதமாக, அது தட்டப்படமாட்டாது என்றும், அது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும், எனவே, அந்நேரத்தில் துஆக் கேளுங்கள் என்பதாகவும் கூறுகின்றார்கள்.

பயன்கள்

  • துஆக் கேட்பதில் இந்த நேரத்திற்கு உள்ள சிறப்பு
  • துஆக் கேட்பவர், துஆவின் ஒழுக்கங்களைப் பேணி, அதற்குரிய இடங்களையும், நேரங்களையும் கவனித்து, பாவங்களைத் தவிர்த்து, பேணுதல் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமானவற்றையும் தவிர்த்து, அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணமும் கொண்டிருந்தால், அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரம் அவரது துஆ ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.
  • துஆ ஏற்றுக்கொள்ளப்படுவது பற்றி முனாவீ (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : அதாவது, துஆவின் நிபந்தனைகள், அடிப்படைகள், ஒழுக்கங்கள் என அனைத்தும் இருக்க வேண்டும். அவற்றில் ஏதாவது விடுபட்டாலும், தன்னைத் தவிர வேறு யாரையும் குறை சொல்ல முடியாது.
  • துஆ ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது : ஒன்றில், உடனடியாக அவர் கேட்டது கொடுக்கப்படும், அல்லது, அதற்கு ஒத்த ஒரு தீங்கு அவரை விட்டும் தடுக்கப்படும். அல்லது, மறுமையில் அவருக்காக அது சேமித்து வைக்கப்படும். அது அல்லாஹ்வின் அறிவு மற்றும், அருளுக்கு ஏற்ப நடைபெறும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

4 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

இரண்டு பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை.அல்லது அவை அரிதாக நிராகரிக்கப்படுகின்றன.அவையாவன அதான் சொல்லும் போது கேட்கும் துஆவும்,யுத்தத்தில் சிலர் சிலரோடு மோதிக் கொள்ளும் போது கேட்கும் துஆவுமாகும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் தரம்: ஸஹீஹானது-சரியானது

விளக்கம்

ஒரு முஜாஹித்-போராளி யுத்தகளத்தில் இருந்து கொண்டுகேட்கும் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.என,அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதின் சிறப்பை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.மேலும் அதானும்,இகாமத்தும் சொல்லும் போது ஒரு முஸ்லிம் கேட்கும் துஆவையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்,என அதானின் சிறப்பையும் இந்த ஹதீஸ் தெளிவுபடத்துகிறது.

HadeethEnc.com இல் படிக்கவும்

5 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

நபியவர்கள் கூறியதாக உம்மு தர்தா ரழி அன்ஹா அறிவிக்கிறார்கள் முஸ்லிமான ஒருவர் தன் சகோதரருக்காக மறைவாக கேட்கும் பிரார்த்தனை ஏற்றுக்;கொள்ளப்படும்.பிரார்த்திக்கும் அந்த மனிதரின் தலையருகே நியமிக்கப்பட்ட ஒரு வானவர் இருப்பார்.பிரார்த்தனை செய்யும் அம்மனிதர் தனது சகோதரருக்காக நல்லதை வேண்டும் போதெல்லாம் நியமிக்கப்பட்ட அவ்வானவர் ஆமீன் எனக் கூறி "உனக்கும் இது போலவே கிடைக்கட்டும்" என்று கூறுவார்

இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: ஸஹீஹானது-சரியானது

விளக்கம்

ஒரு முஸ்லிம் தனது சகோதரருக்காக அவர் அறியாத விதத்தில் கேட்டும் பிரார்த்தனை அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.அவர் தனது சகோதரருக்காக இறைஞ்சும் போது வானவர்களில் ஒருவர் அவரின் தலையருகே இருந்து கொண்டு ஆமீன் கூறி "உனது சகோதரருக்கு கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்த அந்த நன்மை உனக்கும் கிடைக்கட்டுமாக" என கூறுகிறார்.

HadeethEnc.com இல் படிக்கவும்

6 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்தாக அந் நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : பிரார்த்தனையே (துஆவே) வணக்கமாகும்'. என்று கூறிவிட்டு ஸுறா காஃபிரின் 60வது வசனத்தை ஓதினார்கள் : ''என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு பதிலளிப்பேன்.எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக் கின்றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகத்தினுள் நுழைவார்கள்".

இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

பிரார்த்தனை வணக்கமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அந்தப் பிரார்த்தனை அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று தூய்மையுடனும் இதயச்சத்துடனும் இருத்தல் வேண்டும். துஆவானது தேவையை முன்னிருத்திக் கேட்பதாகவோ, அல்லது கோரிக்கையொன்றை முன்னிருத்திக்கேட்பதாகவோ இருக்கலாம். அதாவது அல்லாஹ்விடம் அவனுக்கு பயனுள்ளதை தருமாறும், இம்மையிலும் மறுமையில் அவனுக்கு தீங்காக அமைபவற்றை விட்டும் பாதுகாக்குமாறும் வேண்டுவதாகும். அல்லது வணக்கம் எனும் பிரார்த்தனை அதாவது அல்லாஹ் விரும்பி திருப்தியடையக்கூடிய வெளிப்படையானதும் மறைமுகமானதுமான வார்த்தைகள் செயல்கள் மற்றும் உள்ளத்தால் அல்லது உடலால் அல்லது பணத்தால் செய்யக் கூடிய அனைத்தையும் குறிக்கும்.

பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இதற்கான ஆதாரமான பின்வரும் அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக குறிப்பட்டார்கள் : ''என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு பதிலளிப்பேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகத்தினுள் நுழைவார்கள்".

பயன்கள்

  • பிரார்த்தனை இபாதத்தின் அடிப்படையாகும். எனவே அல்லாஹ் அல்லாத வேரொன்றிற்கு திருப்புவது கூடாது.
  • பிரார்த்தனை அடிமைத்துவத்தின் யதார்த்தத்தையும், இரட்சகனின் நிறைவான தன்மையையும் அவனின் வல்லமையையும் ஏற்றுக்கொள்வதுடன், அடியான் அவனின் பால் தேவையுடையவன் என்பதையும் இது பிரதிபளிக்கிறது.
  • அல்லாஹ்வை வணங்குதில் கர்வத்துடன் இருப்பதற்காகவும், அவனிடம் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதற்குமான கூலி அவர்கள், இழிவடைந்த அட்பர்களாக நரகினுள் நுழைவதே! இது அல்லாஹ்வின் விடயத்தில் கர்வம் கொண்டு இருப்போருக்கான கடுமையான எச்சரிக்கையாகும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

7 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை தொட்டு-அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக மதிப்பிற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை'.

இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது தரம்: நம்பகமானது (ஹஸன்)

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரார்த்தனையை (துஆவை) விட அல்லாஹ்விடம் மிகவும் மதிப்பிற்குரிய விடயம் ஏதுமில்லை என இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.

பயன்கள்

  • இது துஆவின் சிறப்பாகும். யார் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிகிறாரோ அவர் அவனை கண்ணிப்பத்தியவனாகவும், அவன் தன்னிறைவானவன் என்பதை அங்கீகரித்தவனாகவும் உள்ளான். எனவே ஏழையிடம் பிரார்த்தனை செய்யப்படமாட்டாது. அல்லாஹ் யாவற்றையும் செவிமடுப்பவனாவான், ஆகவே செவிடனிடம் பிரார்த்தனை செய்யப்பட மாட்டாது, அவன் வாரி வழங்கும் வள்ளல், ஆகவே கஞ்சனிடம் பிரார்த்தனை செய்யப்படமாட்டாது, அவன் கருணையாளன், ஆகவே கல்நெஞ்சம் உடையவனிடம் பிரார்த்தனை செய்யப்பட மாட்டாது. அவன் வல்லமைமிக்கவன், ஆகவே இயலாதோனிடம் பிரார்த்தை செய்யப்படமாட்டாது, அவன் நெருக்கமானவன் -தூரத்தில் உள்ளோனிடம் பிரார்த்தனை செய்யப்படமாட்டாது. இவையல்லாத அழகியதும் மகத்துவமிக்க உண்ணதமான உயர்பண்புகளைப்பெற்றவனாக அல்லாஹ் இருக்கிறான்.

HadeethEnc.com இல் படிக்கவும்

8 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் தூயவன், அவன் தூயவைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் தனது தூதர்களிடம் எதைச் செய்யும்படி கட்டளையிட்டானோ, அதையே நம்பிக்கையாளர்களையும் (முஃமின்களையும்) செய்யும்படி கட்டளையிட்டுள்ளான்." 'தூதர்களே! தூயவைகளிலிருந்தே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்' என்று கூறிய எல்லாம் வல்ல அல்லாஹ் ''நம்பிக்கையாளர்களே! நான் உங்களுக்குத் தந்துள்ளவற்றில் தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்'' என்றும் கூறியுள்ளான். பின்னர் பெருமானர் (ஸல்) அவர்கள் அதிக தூரம் பயணம் செய்த ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். தலைவிரிகோலமாக, மாசு படிந்தவராக அவர் தனது கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தி ' எனது இரட்டசகனே! எனது இரட்சகனே! என கதறுகிறார். ஆனால் அவர் தனது உணவைப் பெறும் வழி தடுக்கப்பட்டதாக (ஹராமானதாக) இருக்கின்றது, அவர் அருந்தும் பானம் தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது உடை தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது மொத்த வாழ்க்கையே ஹராமான வழியில் தான் இருக்கின்றது. இந்த நிலையில் அவர் எவ்வாறு இறைவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்க முடியும்!

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

நிச்சயமாக அல்லாஹ் குறைகள் மற்றும் பலவீனங்களை விட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட, பரிசுத்தமானவன் என்றும், பரிபூரணம் மிக்க பண்புகள் கொண்டவன் என்றும் செயற்கள், வார்த்தைகள் மற்றும் நம்பிக்கைகள் என அனைத்திலும் அவனுக்கென்றுத் தூய்மையாக இருக்கும், நபியுடைய வழிக்கு நேர்பட்டிருக்கும் பரிசுத்தமானதை மாத்திரமே அல்லாஹ் ஒப்புக் கொள்வான் என்றும் நபியவர்கள் இங்கு அறிவிக்கின்றார்கள். அவ்வாறு மாத்திரம் தான் அல்லாஹ்வை நெருங்கப்படவேண்டும். ஒரு மனிதனின் அமல் பரிசுத்தமடைவதற்கான மிக முக்கியமான ஒரு காரணி, அவனது உணவு ஹலாலானதாகவும், தூய்மையானதாகவும் இருப்பதாகும். அதனூடாகவே அவனது அமல் பரிசுத்தமடைகின்றது. இதனால் தான் அல்லாஹ், ரஸூல்மார்களுக்கு ஹலாலானதை சாப்பிட்டு, நல்லமல்கள் செய்யுமாறு ஏவியது போன்று, விசுவாசிகளுக்கும் ஏவியுள்ளான் "தூதர்களே! நல்லவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், இன்னும், நற்செயலைச் செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்" , "நம்பிக்கைக் கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு - (வணக்கத்திற்குரியவனான) அவனையே வணங்குபவர்களாக இருந்தால் - நீங்கள் நன்றி செலுத்துங்கள்."

பின்பு நபியவர்கள் துஆ ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான பின்வரும் காரணிகளைப் பயன்படுத்தியும், அமல்களைப் பாழ்ப்படுத்தி, துஆ ஏற்றுக்கொள்ளப்படத் தடையாக இருக்கும், 'ஹராமாண உணவை' நபியவர்கள் எச்சரிக்கின்றார்கள்.

முதலாவதாக, ஹஜ், ஜிஹாத், உறவுகளை சேர்ந்து நடத்தல் போன்ற வணக்கங்களுக்காக நீண்ட பயணம் செய்தல்.

இரண்டாவதாக, தலைமுடியை வாராமல், பரட்டைத் தலையுடன், நிறம் மாறிய நிலையில், தனது ஆடைகளும் புழுதிபட்ட பட்டநிலையில் இருத்தல். எனவே இவர் ஒரு நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றார்.

மூன்றாவதாக, தனது இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, துஆக் கேட்டல்.

நான்காவதாக, அல்லாஹ்வின் பெயர்களை முன்னிறுத்தி, யா ரப்பு! யா ரப்பு! என மீண்டும் மீண்டும் கேட்டல்.

துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான இவ்வாறான காரணங்கள் இருந்தும், அது ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ஏனெனில், அவனது உணவும், பானமும், ஆடையும் ஹராமாகும். அவன் ஹராமாலேயே ஊட்டப்பட்டுள்ளான். இவ்வாறான தன்மை உடையவர்களுக்கு பதிலளிக்கப்படுவதென்பது மிகத் தூரமானது. அவனுக்கு எவ்வாறு பதிலளிக்கப்படும்?

பயன்கள்

  • அல்லாஹ் தஆலா, தன்னிலும், தனது பண்புகளிலும், தனது செயற்களிலும், தனது சட்டங்களிலும் பரிபூரணமிக்கவன்.
  • அமல்களை அல்லாஹ்வுக்கென்று உளத் தூய்மையுடன், நபியவர்களைப் பின்பற்றிச் செய்யுமாறு ஏவப்பட்டுள்ளமை.
  • அமல்களை நோக்கி ஆர்வமூட்டும் அம்சங்களைப் பயன்படுத்தல். அதாவது, நபியவர்கள், 'நிச்சயமாக அல்லாஹ், தூதர்களுக்கு ஏவியதையே, விசுவாசிகளுக்கும் ஏவினான்.' என்று கூறுகின்றார்கள். எனவே, ஒரு முஃமின் இது ரஸூல்மார்களுக்கும் ஏவப்பட்ட ஒன்று என்பதை அறிந்துகொண்டால், அதை ஆர்வத்துடன், உறுதியாக நிறைவேற்றுவான்.
  • ஹராமானதை சாப்பிடுவது, துஆ ஏற்றுக்கொள்ளப்படத் தடையாக இருக்கும் காரணிகளில் ஒன்றாகும்.
  • ஐந்து அம்சங்கள் துஆ ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான காரணிகளாகும் : 1. நீண்ட பயணம் போதல். ஏனெனில், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான மிக முக்கிய காரணியாகிய, 'பலவீனப்படுதல்' அங்கு இருக்கின்றது. 2. நிர்ப்பந்த நிலை. 3. வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்துதல். 4. அல்லாஹ்வின் ருபூபிய்யாவைத் திரும்பத் திரும்ப பல தடவைகள் கூறிக் கேட்டல். துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகப் பயன்படுத்தமுடியுமான மிக முக்கியமான ஒன்றாக அது இருக்கின்றது. 5. உணவும், குடிபானமும் தூய்மையாக இருத்தல்.
  • ஹலாலான, தூய்மையான உணவை சாப்பிடுவது, நல்ல அமல்கள் செய்வதற்குத் துணையாக இருக்கும் காரணிகளில் ஒன்றாகும்.
  • காழீ இயாழ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : தூய்மையானது என்பது, அசுத்தமானது என்பதன் எதிர்மறையாகும். அது அல்லாஹ்வின் பண்பாகக் கூறப்பட்டால், அவன் குறைகளை விட்டுத் தூய்மைப் படுத்தப்பட்டவன், இயலாமைகளை விட்டும் பரிசுத்தமாக்கப்பட்டவன் என்ற கருத்தைத் தரும். ஓர் அடியானுக்குப் பண்பாகக் கூறப்பட்டால், கீழ்த்தரமான குணங்கள் மற்றும் அசிங்கமான செயல்களை விட்டும் நீங்கி, புகழத்தக்க குணங்களை உடையவன் என்ற கருத்தைத் தரும். அது சொத்துக்களுக்குப் பண்பாகக் கூறப்பட்டால், ஹலாலான, சிறந்த சொத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

துஆ ஏற்கப்படும் நேரங்கள்: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.