பாங்குக்குப் பின் துஆ

பாங்கு சொல்லப்படும்போது கூற வேண்டியவையும் அது முடிந்த பின் ஓதும் துஆவும்.

1 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் முஅத்தின் கூறுவது போன்று கூறுங்கள்'

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

முஅத்தின் -தொழுகை அழைப்பாளர்- பாங்கு கூறினால் அவற்றிற்கு அவர் கூறுவதை போன்று வார்த்தைக்கு வார்த்தை பதில் கூறுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதாவது அவர்-முஅத்தின்- அல்லாஹு அக்பர் எனக் கூறினால் அவரைத்தொடர்ந்து நாமும் அல்லாஹு அக்பர் கூற வேண்டும், அதே போன்று ஷாஹாதா - அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு, அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் என்று கூறுகையில் தொடர்ந்து நாமும் அது போல் கூற வேண்டும். ஆனால் (ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் பலாஹ்) என்ற வார்த்தைகள் இவற்றிலிருந்து விதிவிலக்குப் பெறுகிறது. இந்த வார்த்தையினை முஅத்தின் கூறிய பின் (லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்) எனக் கூறுதல் வேண்டும்.

பயன்கள்

  • பல முஅத்தின்களின் அதானைக் கேட்கும் சந்தர்ப்பங்களில் முதலாவது ஒருவரின் பாங்கை பின்தொடர்ந்து பதிலளித்ததன் பின் மற்றைய அதானை பின்தொடர வேண்டும் என்பது, இந்த ஹதீஸ் குறிப்பிடும் பொதுக்கருத்தாகும்.
  • தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக செல்லும் சந்தர்ப்பம் தவிர்ந்த மற்றைய அனைத்து நிலமைகளிலும் அதானுக்கு பதிலளிக்க வேண்டும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : பாங்கு சொல்பவர் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் (பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்)என்றால் நீங்களும் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டும்.

பிறகு அவர் 'அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்' (பொருள் : அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக்கூடிய வேறு இறைவனில்லை என்று நான் சாட்சிகூறுகிறேன்.) என்றால் நீங்களும் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்ல வேண்டும்.

பிறகு அவர் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் (பொருள் : (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்' என்றால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் ஹய்ய அலஸ்ஸலாஹ், (பொருள் தொழுகைக்காக விரைந்து வாருங்கள்) என்றால், அப்போது நீங்கள் 'லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்' (பொருள்: நன்மையை செய்வதற்கோ தீமையிலிந்து தவிரந்திருக்கவோ அல்லாஹ்வின் உதவியின்றி முடியாது' என்று சொல்ல வேண்டும்;

பிறகு அவர் 'ஹய்ய அலல்ஃபலாஹ்' என்றால் அப்போதும் நீங்கள் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லவேண்டும்

பிறகு அவர் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்றால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லவேண்டும்;

பிறகு அவர் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்றால் நீங்களும் 'லாஇலாஹ இல்லல்லாஹ' என்று உள்ளத்தின் உறுதியுடன் கூறினால் அத்தகையோர் சுவர்க்கம் புகுவர்'.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

அதான் என்பது தொழுகையின் நேரம் வந்து விட்டது என்பதை மக்களுக்கு அறிவிப்பதாகும். அதானின் வார்த்தைகள் யாவும் ஈமானிய நம்பிக்கையின் தொகுப்பாக காணப்படுகிறது.

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'அதானை' செவிமடுக்கையில் மார்க்கத்தில் பின்பற்ற வேண்டிய விடயங்களை தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது அதானை செவிமடுப்பவர் முஅத்தின் சொல்வது போன்று அவரும் பதில் கூறவேண்டும். உதாரணத்திற்கு முஅத்தின் 'அல்லாஹு அக்பர்' என்று கூறினால் அதானை செவிமடுப்பவர் அல்லாஹு அக்பர் எனக் கூறவேண்டும். என்றாலும் முஅத்தின் 'ஹய்யஅலஸ்ஸலாஹ் 'ஹய்யஅலல் பலாஹ்' எனக் கூறும்போது லாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹ் எனப் பதில் கூறவேண்டும்.

ஒருவர் முஅத்தினுடன் சேர்ந்து அவர்கூறும் வார்த்தைகளை உளத்தூய்மையுடன் கூறினால் அவர் சுவர்க்கம் நுழைவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

அதான் வாசகங்களின் கருத்துக்கள் : 'அல்லாஹு அக்பர்' என்பது அல்லாஹ் மிகவும் தூய்மையானவன், மிகவும் போற்றுதலுக்குரியவன், மிகவும் கண்ணியமானாவன் அனைத்து விடயங்களை விடவும் பெரியவன் என்பதைக் குறிக்கும்.

அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ்' என்பது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை' என்பதைக் குறிக்கும்.

'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்பதன் பொருள் : முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர், அவர்களை அல்லாஹ் தூதராக அனுப்பினான் என்பதை உள்ளத்தால் ஏற்று நாவால் சாட்சி கூறுகிறேன். என்பதாகும். மேலும் அவர்களுக்கு கட்டுப்படுவது கடமையாகும்.

'ஹய்யஅலஸ் ஸலாஹ்'என்பதன் கருத்து : தொழுகைக்காக விரைந்து வருங்கள் என்பதாகும். இதனைக் செவிமடுத்தவரின் பதில் 'லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ் என்பதன் அர்த்தம்: கட்டுப்படுவதற்கு தடையாக இருப்பவற்றிலிருந்து மீட்சி பெருவதற்குரிய வழியும்; அவற்றை செய்வதற்குரிய சக்தியும் அத்துடன் எந்த ஒருவிடயத்தையும் செய்வதற்கு வல்லமையும் அல்லாஹ்வின் உதவியின்றி கிடையாது'.

'ஹய்ய அலல்பலாஹ' என்பது வெற்றியின் வழியை நோக்கி வாருங்கள். அதுதான் சுவர்க்கத்தை வெற்றிகொள்வதும், நரகத்தை விட்டும் தப்புவதுமாகும்.

பயன்கள்

  • முஅத்தின் கூறுவது போன்று அதானுக்கு பதிலளிப்பதன் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல், என்றாலும் முஅத்தின் ஹய்யஅலஸ்ஸலாஹ், ஹய்யஅலல் பலாஹ் எனக் கூறுகையில் மாத்திரம் 'லா ஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹ்' என்ற வாசகத்தை கூறுதல் வேண்டும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

3 ஒரு முறை

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ القَائِمَةِ، آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: யாராவது அதானைக் கேட்ட போது, 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காஇமா, ஆதி முஹம்மதனில் வஸீலத வல் பழீலா, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்' என்று கூறுகின்றாரோ, அவருக்கு மறுமையில் எனது சபாஆ (பரிந்துரை) கிடைக்கும்.

துஆவின் அர்த்தம் : யா அல்லாஹ் இந்த முழுமையான அழைப்பினதும் நிலையான தொழுகையினதும் ரப்பே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலா என்னும் அந்தஸ்தையும், சிறப்பையும் கொடுப்பாயாக! நீ வாக்களித்திருக்கின்ற புகழுக்குரிய அந்தஸ்துக்கு அவரை அனுப்புவாயாக.

இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார் தரம்: சரியானது

விளக்கம்

இங்கு நபியவர்கள் தெளிவுபடுத்துவது என்னவென்றால் யாராவது ஒரு முஸ்லிம் பாங்கு சொல்வதைக் கேட்டு பின்னர்,

(யா அல்லாஹ்! இந்த முழுமையான) அதாவது இறைத்தூதினதும், ஓரிறைக் கொள்கையினிதும் பரிபூரணமான (அழைப்பின் ரப்பே) அதாவது அல்லாஹ்வை வணங்கவும், தொழுகையை நிலைநாட்டவும் விடுக்கப்படும் அழைப்பு (நிலையான தொழுகை) என்ற நிலை நாட்டப்படும் தொழுகை (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலாவையும்) இது நபியவர்களுக்கு மாத்திரம் தகுதியான சுவனத்தின் ஓர் உயர்ந்த அந்தஸ்தாகும் (சிறப்பையும் கொடுப்பாயாக) அதாவது ஏனைய படைப்புக்களை விட உயர்ந்த அந்தஸ்தை அவர்களுக்கு கொடுப்பாயாக (அவர்களை புகழப்பட்ட அந்தஸ்துக்கு அனுப்புவாயாக) அதாவது புகழுக்குரிய அந்தஸ்தாகிய மறுமையில் உள்ள மகத்துவமிக்க சபாஆ

(அதாவது நீ அதனை அவர்களுக்கு வாக்களித்துள்ளாய்) அதாவது, 'உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்ற (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்' என்ற வசனத்தின் மூலம் அது நபியவர்களுக்கு உரியது என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

இந்த துஆவை யார் ஓதுகின்றாரோ அவருக்கு மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரை கட்டாயமாகி விடும்.

பயன்கள்

  • பாங்குக்கு பதில் அளித்துவிட்டு இந்த துஆவை ஓதுவது மார்க்கம் காட்டித் தந்துள்ள ஒன்றாகும். பாங்கு சத்தம் கேட்காதவர் இதை ஓதமாட்டார்.
  • இங்கு நபியவர்களின் சிறப்பு உணர்த்தப் படுகின்றது. அதாவது, வஸீலா, பலீலா, அல் மகாமுல் மஹ்மூத் மற்றும் படைப்புக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவதற்காக செய்யப்படும் மகத்துவம் மிக்க பரிந்துரை போன்ற சிறப்பம்சங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • 'என்னுடைய பரிந்துரை அவருக்கு கிடைக்கும்' என்பதன் ஊடாக நபியவர்களுக்கு மறுமையில் ஷஃபா உள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.
  • நபியவர்களின் சபாஆ என்பது தனது உம்மத்தில் பெரும் பாவம் செய்தவர்கள் நரகம் நுழையாமல் இருக்கவும், அவ்வாறு நுழைந்தவர்கள் வெளியேறவும், மூமின்கள் விசாரணை இன்றி சுவனம் நுழையவும், நுழைந்தவர்களின் அந்தஸ்துக்கள் உயர்த்தப்படவும் நபியவர்கள் சிபாரிசு செய்வதாகும்.
  • தீபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : பாங்கின் ஆரம்பம் தொடக்கம் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் வரையுள்ளது 'முழுமையான அழைப்பாகும்' ஹையா அலஸ் ஸலாஹ், ஹையா அலல் பலாஹ் ஆகியவை நிலையான தொழுகையாகும். "அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள்" என்ற வசனத்திலிருந்து அது பெறப்பட்டுள்ளது. இங்கு ஸலாத் என்பதன் மூலம் துஆ நாடப்படவும் முடியும். 'காஇமா' என்றால் 'நிலைத்து நிற்கக்கூடிய' என்று அர்த்தமும் கொடுக்கப்படலாம். எனவே அதன் அடிப்படையில், 'வஸ்ஸலாதில் காஇமா' என்பது தஃவதித் தாம்மா என்பதைத் தெளிவு படுத்துகின்றது. அந்த நேரம் அழைப்பு விடுக்கப் படும் அறிமுகமான தொழுகை நாடப்படுகின்றது என்றும் எடுக்கலாம். அதுவே இங்கு வெளிப்படையாக விளங்கும் அர்த்தமாகும்.
  • முஹள்ளப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இந்த ஹதீஸில் தொழுகை நேரங்களில் துஆக் கேட்க ஆர்வமூட்டப்படுகின்றது. ஏனெனில் இது துவா ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்க முடியுமான ஒரு சந்தர்ப்பம் ஆகும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

4 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் (முஅத்தின்) அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

தொழுகைக்காக முஅத்தின் அதான் சொல்லக் கேட்டால் 'ஹய்யஅலஸ்ஸலாத்'; ஹய்யஅலலல் பலாஹ்' தவிர்ந்த வாசகங்களில் அவரைத் தொடர்ந்து அவர் கூறுவதைப் போன்று பதில் கூறுமாறும், மேற்படி இரு வாசகங்களை கூறுகையில் 'லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ்' என்று பதில் கூறுமாறும், அதான் கூறி முடிந்ததைத் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுமாறும் இந்த ஹதீஸில் வழிகாட்டுகிறார்கள். யார் நபியவர்கள் மீது ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அதன் காரணமாக அவரின் மீது அல்லாஹ் பத்து தடவை ஸலவாத் கூறுகிறான். அல்லாஹ் அடியார் மீது ஸலவாத் கூறுதல் என்பது மலக்குகளிடத்தில் அந்த அடியானை அல்லாஹ் புகழ்வதைக் குறிக்கும்.

பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வஸீலா எனும் சுவர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியை வழங்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுமாறு கட்டளையிட்டார்கள். இவ்வுயர் பதவியானது உலகில் உள்ள அனைத்து அடியார்களில் ஒரே ஒரு அடியாருக்குத் தவிர வேறு யாருக்கும் சாத்தியமாகாது. அந்த அடியான் நானாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்றேன். இவ்வாறு நபியவர்கள் கூறியது அவர்களின் பணிவினாலாகும். ஏனெனில் அடியார்களில் இவ்வுயரிய அந்தஸ்தை பெருவதற்கு அவ்கள்; ஒருவரே பொருத்தமானவர்கள்; காரணம், அவர்களே அடியார்களில் மிகவும் சிறப்புக்குரியர்கள்.

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் நபியவர்களுக்காக வஸீலாவை அல்லாஹ்விடம் கேட்கிறாறோ அவருக்கு நபியவர்களின் ஷபாஅத் -பரிந்துரை கிடைக்கும் எனவும் தெளிவு படுத்துகிறார்கள்.

பயன்கள்

  • அதான் கூறுபவரின் அதானுக்கு பதில் கூறுமாறு வலியுறுத்தல் .
  • அதான் கூறுபவரின் அதானுக்கு பதில் கூறிய பின் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் சொல்வதன் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல்.
  • நபி மீது ஸலவாத் கூறியதை தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்காக வஸீலாவை கேட்குமாறு வலியுறுத்தல்.
  • வஸீலா என்பதன் கருத்தும் அதன் மேன்மையும், அப்பதவியானது ஒரு அடியாருக்கு மாத்திரமே உரியது என்பது பற்றி விபரித்திருத்தல்.
  • நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அந்த உயர்ந்த பதவிக்கு தனித்துத் திகழ்ந்ததால் அவர்களின் சிறப்பை விளக்குதல்.
  • யார் அல்லாஹ்விடம் நபியவர்களுக்கு வஸீலாக் கிடைக்க பிரார்த்திக்கிறாரோ அவருக்கு நபியவர்களின் ஷபாஅத் -பரிந்துரை- மறுமையில் கிடைக்கும்.
  • நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பணிவை விளக்குதல், அன்னார் அவ்வுயர் பதவி தனக்குக் கிடைக்குமென்றிருந்தும் அது தனக்குக் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்குமாறு தனது சமூகத்திடம் பிரார்த்திக்குமாறு வேண்டியுள்ளார்கள்.
  • ஒரு நன்மைக்கு அதே போன்ற பத்து நன்மைகள் உண்டு என்ற நபியவர்களின் வாக்கு அல்லாஹ்வின் அருள் மற்றும் கருணையின் எல்லையற்ற தன்மையை காட்டுகிறது.

HadeethEnc.com இல் படிக்கவும்

5 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆ தட்டப்படமாட்டாது.

இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள் தரம்: சரியானது

விளக்கம்

இங்கு நபியவர்கள், அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆவின் சிறப்பைத் தெளிவுபடுத்தும் விதமாக, அது தட்டப்படமாட்டாது என்றும், அது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும், எனவே, அந்நேரத்தில் துஆக் கேளுங்கள் என்பதாகவும் கூறுகின்றார்கள்.

பயன்கள்

  • துஆக் கேட்பதில் இந்த நேரத்திற்கு உள்ள சிறப்பு
  • துஆக் கேட்பவர், துஆவின் ஒழுக்கங்களைப் பேணி, அதற்குரிய இடங்களையும், நேரங்களையும் கவனித்து, பாவங்களைத் தவிர்த்து, பேணுதல் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமானவற்றையும் தவிர்த்து, அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணமும் கொண்டிருந்தால், அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரம் அவரது துஆ ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.
  • துஆ ஏற்றுக்கொள்ளப்படுவது பற்றி முனாவீ (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : அதாவது, துஆவின் நிபந்தனைகள், அடிப்படைகள், ஒழுக்கங்கள் என அனைத்தும் இருக்க வேண்டும். அவற்றில் ஏதாவது விடுபட்டாலும், தன்னைத் தவிர வேறு யாரையும் குறை சொல்ல முடியாது.
  • துஆ ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது : ஒன்றில், உடனடியாக அவர் கேட்டது கொடுக்கப்படும், அல்லது, அதற்கு ஒத்த ஒரு தீங்கு அவரை விட்டும் தடுக்கப்படும். அல்லது, மறுமையில் அவருக்காக அது சேமித்து வைக்கப்படும். அது அல்லாஹ்வின் அறிவு மற்றும், அருளுக்கு ஏற்ப நடைபெறும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

பாங்குக்குப் பின் துஆ: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.