தொழுகைக்குப் பின் திக்ர்கள் (ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும்)

ஃபர்ளான தொழுகைகளில் ஸலாம் கொடுத்த பின் ஓதப்படும் திக்ர்கள்.

1 ஒரு முறை

أَسْتَغْفِرُ اللَّهَ (٣)، اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

பொருளும் ஆதாரமும்

ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததும் 'அஸ்தஃபிருல்லாஹ்' (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று மூன்று தடவைகள் கூறி விட்டு பின்வரும் திக்ரை ஓதுவார்கள் : 'அல்லாஹும்ம அன்தஸ் ஸலாமு, வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி'.' (பொருள்) யா அல்லாஹ்: நீ ஈடேற்றமானவன், உன் மூலமே ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியமும் மான்பும் உடையவனே, நீ உயர்ந்தோனாய் உள்ளாய்) வலீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இமாம் அவ்ஸாஈ (ரஹ்) அவர்களிடம் இஸ்திபார் செய்வது எப்படி என வினவினேன், அதற்கு அவர்கள் 'அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' என்று நீ கூற வேண்டும் என்றார்கள்.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததும் 'அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' என மூன்று தடவைகள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

பின்னர் அவர்கள் தனது இரட்சகனை 'அல்லாஹம்ம அன்தஸ் ஸலாமு, வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி' என்ற கூற்றினால் மகத்துவப்படுத்தினார்கள். இங்கு அஸ்ஸலாம் என்பது அல்லாஹ் தனது பண்புகளில் பரிபூரண சாந்தியளிப்பவன், எல்லாவகையான குறைகளை விட்டும் தூய்மையானவன் என்பதாகும். அவனிடமிருந்தே இம்மை மறுமையின் தீங்குகளைவிட்டும் ஈடேற்றத்தை கோர வேண்டும். வேறு யாரிடமும் அதனை தேடக்கூடாது. அவன் தூயவன் அவனிடமே இம்மை மறுமையின் நலன்கள் யாவும் பெருகிக்கிடக்கிறது. அவனே மகத்துவம் மற்றும் உபகாரம் போன்ற பண்புகளின் சொந்தக்காரனாவான்.

பயன்கள்

  • தொழுகை முடிந்ததும் இஸ்திஃபார் செய்வதும் அதனை ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் பேணித் தொடராக செய்வதும் விரும்பத்தக்க விடயமாகும்.
  • இபாதத்தில் -வணக்க வழிபாடுகளில் ஏற்பட்ட குறைகளை முழுமைப்படுத்திடவும், ஏனைய நற்காரியங்களை மேற்கொள்ளும் போது ஏற்பட்ட குறைகளை நிவர்த்திக்கவும் இஸ்திஃபாரில் -பாவமன்னிப்கோருவதில் ஈடுபடுவது விரும்பத்தக்கது.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 ஒரு முறை

لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

பொருளும் ஆதாரமும்

முகீரதுப்னு ஷுஃபாவின் எழுத்தாளர் வர்ராத் கூறுகிறார்: முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் முகீரதுப்னு ஷுஃபா எனக்கு எழுதுமாறு பின்வரும் ஹதீஸை குறிப்பிட்டார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழுகை முடிந்ததும் பின்வருமாரு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லிஷைஇன் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதய்த்த, வலா முஃதிய லிமா மனஃத்த, வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து .(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவராலும் கொடுக்கவும் முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் உன்னிடம் பயன் அளிக்காது)

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழுகையைத் தொடர்ந்து : 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லிஷைஇன் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதய்த்த வலா முஃதிய லிமா மனஃத்த வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து என கடமையான தொழுகைக்குப் பிறகு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இந்த திக்ரின் கருத்து : லாஇலாஹ இல்லல்லாஹு என்ற ஏகத்துவ வார்த்தையை உளப்பூர்வமாக ஏற்று அங்கீகரிக்கிறேன். உண்மையான வணக்கம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது என்று உறுதிப்படுத்துவதோடு, அவனைத் தவிர உள்ளவற்றிற்கு வழிபாடு எதுவும் இல்லை என்றும் கூறுகிறேன். எனவே உண்மையாக வணங்கப்பட வேண்டியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. உண்மையான அரசாட்சி அல்லாஹ்வுக்கே சொந்தமானது. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளோரின் அனைத்து புகழாரங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் எல்லாவற்றிலும் சக்தி படைத்தவனாக உள்ளான் எனவே அவன் நாடி கொடுத்தவற்றை அல்லது தடுத்தவற்றை எவராலும் தடுத்திட முடியாது. மேலும் செல்வந்தனின் செல்வம் மறுமையில் எவ்விதப்பயனையும் தரமாட்டாது அவனின் நல்லமல்கள் மாத்திரமே அவனுக்கு நற்பயனளிக்கும்.

பயன்கள்

  • ஏகத்துவம் மற்றும் இறைபுகழ் போன்ற வார்த்தைகளை இந்த திக்ர் உள்ளடக்கியிருப்பதால் தொழுகைக்குப்பிறகு இதனை ஓதுவது வரவேற்கத்தக்கதாகும்.
  • ஸுன்னாக்களை நடைமுறைப்படுத்தவும் அதனை பரப்பவும் விரைந்து செயற்படுதல்.

HadeethEnc.com இல் படிக்கவும்

3 ஒரு முறை

لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، لَا إِلَهَ إِلَّا اللهُ، ‌وَلَا ‌نَعْبُدُ ‌إِلَّا إِيَّاهُ، لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لَا إِلَهَ إِلَّا اللهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

பொருளும் ஆதாரமும்

அபுஸ்ஸுபைர் அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு ஸுபைர் அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகையிலும் ஸலாம் கொடுத்ததும் பின்வருமாறு ஓதுவார்கள் : 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீகலஹூ லஹுல்முல்கு வலஹுல்ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் பழ்லு வலஹுஸ் ஸனாஉல் ஹஸன். லாஇலாஹ இல்லல்லாஹு முஃக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காபிரூன்'. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் இதனை ஓதுவார்களெனக் கூறினார்கள். பொருள் : உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன், தீமையிலிருந்து விலகுவதும் நன்மையின் மீது ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத்தவிர வேறெவரையும் நாங்கள் வணங்கமாட்டோம். அருட்கொடைகள் அனைத்தும் அவனுடையதே. சிறப்பும் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

இந்த மகத்தான திக்ரை ஒவ்வொரு கடமையான தொழுகைளிலும் ஸலாம் கொடுத்ததன் பின் ஓதி தஸ்பீஹ் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். இதன் கருத்து பின்வருமாறு :

'லாஇலாஹ இல்லல்லாஹு' என்ற வார்த்தை உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறுமில்லை என்பதைக் குறிக்கும்.

'வஹ்தஹு லா ஷரீகலஹு'அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, என்பது (இறைமைத்துவத்திலும்) உலூஹிய்யாவிலும், ருபூபிய்யாவிலும் பெயர்கள் மற்றும் பண்புகளிலும் தனித்துவமானவனாகவும், பிற படைப்புகளுடன் கூட்டுச்சேராதவனாகவும் உள்ளான் என்பதாகும்.

'லஹுல் முல்க்' வானங்கள் மற்றும் பூமி அதற்கிடைப்பட்ட அகன்று விரிந்த ஆட்சியதிகாரத்திற்கு சொந்தக்காரன் என்பதைக் குறிக்கும்.

'வலஹுல் ஹம்து' என்பது ஒட்டுமொத்தமான முழுமைத்துவத்தைப் பெற்றவன் இன்பத்திலும் துன்பத்திலும் மற்றும் எல்லா சூழ்நிலைகளிலும் நேசித்து போற்றி புகழத்தக்கவன் என்பதாகும்.

'வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' அவனின் சக்தியும், வல்லமையும் எல்லா வகையிலும் முழுமையானது, அவனுக்கு இயலாதது என்று ஒன்று கிடையாது, அனைத்தும் அவனுக்கு இயலுமான விவகாரங்களே என்பது இதன் பொருளாகும்.

' லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்' என்பது ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறிச்செல்லவதோ, அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் நிலையிலிருந்து அவனுக்கு கட்டுப்படும் நிலைக்குச் செல்வதற்குமான ஆற்றலைப் பெறுவது அல்லாஹ்வின் மூலமேயாகும், அவனே இதற்கு உதவிபுரிபவனாக உள்ளான். அவனின் மீதே எமது பொறுப்புகளை நாம் ஒப்படைக்கிறோம்.

' லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு' என்ற வாசகம் இணைவைத்தலை புறக்கணித்து உலூஹிய்யாவை வலியுறுத்துவதாக இது அமைந்துள்ளது. அவனைத் தவிர வணங்கி வழிபட தகுதி படைத்தவன் வேறு யாரும் கிடையாது.

'லஹுன்னிஃமது வலஹுல் பழ்லு' "அருளும் அருட்கொடைகளும் அவனுக்கே உரியன" என்பது அருள்களைப் படைத்து அதனை அவனே சொந்தமாக்கி கொள்வதோடு அவற்றை நாடிய அடியார்களுக்கு கொடுத்து கண்ணியப் படுத்துகிறான் என்பதாகும்.

' வலஹுஸ்ஸனாஉல் ஹஸன்' அழகிய பாராட்டும், புகழும்' அவனுக்கே உரியன என்பது இந்தப்பாராட்டு அவனின் தாத் -மெய்நிலை- மற்றும் அவனின் பண்புகள் செயற்பாடுகள் அருட்கொடைகள் மற்றும் எல்லா நிலைகளுக்குரித்தாகும்.

'லாஇலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன' என்பதன் கருத்து : அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் எவ்வித முகஸ்துதியோ, வெளிப்பகட்டோ இன்றி அல்லாஹ்வை மாத்திரம் நோக்காகக் கொண்டு தூய்மையைக் கடைப் பிடித்தலைக் குறிக்கிறது.

'வலவ் கரிஹல் காபிரூன்' அதாவது காபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ்வை ஏகத்துவப் படுத்தி அவனுக்கு வணக்கங்களை செலுத்துவதில் நிலைத்திருப்போம் என்பதாகும்.

பயன்கள்

  • இந்த திக்ருகளை ஒவ்வொரு பர்ழான தொழுகைக்குப் பின்னரும் பேணி ஓதிவருவது விரும்பத்தக்கதாகும்.
  • காபிர்கள் வெறுத்த போதிலும், ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தைக் கொண்டே பெருமையடைந்து, அதன் அடையாளச் சின்னங்களை வெளிப்படுத்த வேண்டும்.
  • ஹதீஸில் 'துபரஸ்ஸலாத்' (தொழுகையின் பின்) என்ற வார்த்தை இடம் பெற்று குறிப்பிட்ட விடயம் ஒரு திக்ராக இருந்தால் அது ஸலாம் கொடுத்ததன் பின் ஒத வேண்டியது என்பதையும், அது ஒரு 'துஆ' பிரார்த்தனையாக இருப்பின் அது தொழுகையை முடிக்க முன் -ஸலாம் கொடுக்க முன்- ஒதவேண்டியது என்பதைக் குறிக்கும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

4 ஒரு முறை

سُبْحَانَ اللَّهِ (٣٣)، الْحَمْدُ لِلَّهِ (٣٣)، اللَّهُ أَكْبَرُ (٣٣)، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

பொருளும் ஆதாரமும்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள் : 'யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99தடவைகள் கூறிவிட்டு 100 வதாக

லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீ(க்)க லஹூ லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்)

எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்'.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

பர்ழான தொழுகை முடிந்த பின் கூற வேண்டிய தஸ்பீஹ் பற்றி தெளிவு படுத்தியுள்ளார்கள் அவை பின்வருமாறு :

'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் பரிசுத்தமானவன்) 33 தடவைகள் 'சுப்ஹானல்லாஹ்' என்பதன் பொருள் அல்லாஹ் எல்லா வகையான குறைகளிலிருந்தும் தூய்மையானவன் என்பதாகும்.

'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்புக்கே)33 தடவைகள் 'அல்ஹம்துலில்லாஹ'; என்பதன் கருத்து அல்லாஹ்வை அவனுக்குரிய பரிபூரண பண்புகளினால் அன்புடனும் மகிமைப்படுத்தியும் புகழ்வதாகும்.

அல்லாஹு அக்பர் 33 தடவைகள் (அல்லாஹ் மிகப்பெரியவன்) அதாவது அல்லாஹ் எல்லாவற்றையும் விட உண்ணதமானவன் மிகவும் கண்ணியத்துக்குரியவன்.

100 வதாக

லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீ(க்)க லஹூ லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்) அதாவது : உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. முழுமையான ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! மகிமைபடுத்துதல் மற்றும் நேசம் கொள்ளுதலுடன் புகழுக்கும் பாராட்டுக்கும் தகுதியானவன், அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் அவனுக்கு இயலாமை என்பது கிடையாது.

இதனை யார் கூறுகிறாரோ கடல் கொந்தளிப்பின் போதும் அலைகளின் போதும் ஏற்படும் நுரையளவு அதிகமாக அவரின் பாவங்கள் இருந்தாலும் அவை அழிக்கப்பட்டு மன்னிக்கப் பட்டு விடும்.

பயன்கள்

  • இந்த திக்ரை பர்ழான தொழுகைக்குப் பிறகு ஓதுவது விரும்பத்தக்கது.
  • இந்த திக்ர் (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஒரு காரணமாகும்.
  • அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடை, கருணை மற்றும் மன்னிப்பை இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டுகின்றமை.
  • இந்த திக்ர் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஒரு காரணம். இங்கு பாவங்கள் மன்னிக்கப்படுதல் என்பதற்கான பொருள் சிறிய பாவம் மன்னிக்கப்படுவதைக் குறிக்கும். பெரிய பாவங்கள் தவ்பாச் செய்யாது மன்னிக்கப்படாது.

HadeethEnc.com இல் படிக்கவும்

5 ஒரு முறை

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

பொருளும் ஆதாரமும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.'

இதனை இமாம் நஸாஈ குப்ராவில் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

பர்ழான தொழுகை முடிந்த பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகிறாரோ அவர் சுவர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம் மாத்திரமே தடையாக உள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஆயத்துல் குர்ஸி ஸூறா பகராவில் இடம்பெற்றுள்ளது : அந்த வசனம் பின்வருமாறு: 'அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்ழி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி, யஃலமு மாபய்ன அய்தீஹிம் வமா கல்பஹும், வலா யுஹீதூன பிஷய்இம் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ழ வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம்' (பகரா 2:255).

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் நிலைத்திருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் சூழ்ந்தறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது சிம்மாசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று, அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (பகரா : 255).

பயன்கள்

  • அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும் உயரிய பண்புகளையும் உள்ளடக்கியிருக்கும் மகத்தான இந்த வசனத்தின் சிறப்பு.
  • பர்ழான ஒவ்வொரு தொழுகையின் பின்பும் இந்த வசனத்தை ஓதுவது வரவேற்கத்தக்கது.
  • நற்காரியங்கள் சுவர்க்கம் செல்வதற்கான வழியாகும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

6 ஒரு முறை

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

பொருளும் ஆதாரமும்

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் எனது கையைப் பிடித்து இவ்வாறு கூறினார்கள் : முஆதே! நான் உம்மை நேசிக்கின்றேன்! முஆதே! ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும், 'அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வசுக்ரிக வஹுஸ்னி இபாததிக' (யா அல்லாஹ்! உன்னை நினைவுகூறவும், உனக்கு நன்றிசெலுத்தவும், அழகான முறையில் உன்னை வணங்கவும் எனக்கு நீ உதவுவாயாக) என்று கூறுவதை விட்டுவிட வேண்டாம். என நான் உமக்கு உபதேசம் செய்கின்றேன்.'

இமாம்களான அபூ தாவுத், நஸாஈ, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது தரம்: சரியானது

விளக்கம்

நபியவர்கள் முஆத் (ரலி) அவர்களின் கையைப் பிடித்து இவ்வாறு கூறினார்கள் : நான் உம்மை நேசிக்கின்றேன்! முஆதே! ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும், பின்வரும் துஆவைக் கூறுவதை விட்டுவிடவேண்டாம் என நான் உமக்கு உபதேசம் செய்கின்றேன். 'யா அல்லாஹ் (வணக்கத்திற்கு நெருக்கமாக்கி வைக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும்) உன்னை நினைவுகூறவும், (கிடைக்கின்ற அருட்கொடைகளுக்காகவும், தடுக்கப்படுகின்ற சோதனைகளுக்காகவும்) நன்றிசெலுத்தவும், (உளத்தூய்மையுடனும், நபியவர்களைப் பின்பற்றியும்) அழகான முறையில் உன்னை வணங்கவும் எனக்கு உதவி செய்வாயாக!'

பயன்கள்

  • ஒரு மனிதர் அல்லாஹ்வுக்காக இன்னொருவரை நேசிப்பதை அறிவித்துவிடுவது மார்க்கம் காட்டித் தந்த ஒன்றாகும்.
  • கடமையான, உபரியான எல்லாத் தொழுகையின் இறுதியிலும் இந்த துஆவை ஓதுவது ஸுன்னாவாகும்.
  • குறைவான சொற்களைக் கொண்ட இந்த துஆவில், உலக, மறுமைத் தேவைகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளன.
  • சத்தியத்தை உபதேசித்துக் கொள்வது, நன்மை நாடிக் கொள்ளுதல், நன்மையிலும், இறையச்சத்திலும் ஒத்தாசையாக இருத்தல் போன்றவை அல்லாஹ்விற்காக நேசித்துக்கொள்வதன் பயன்களாகும்.
  • தீபி அவர்கள் கூறுகின்றார்கள் : அல்லாஹ்வை நினைவுகூர்வதென்பது, உள்ளம் விசாலமடைதலுக்கான முன்னேற்பாடாகும். அவனுக்கு நன்றிசெலுத்துவது, அருட்கொடைகளைப் பாதுகாப்பதற்கான சரியான வழியாகும். அழகான முறையில் வணங்குவதென்பதன் நாட்டம், அல்லாஹ்வை விட்டும் திசைதிருப்பும் அனைத்தையும் விட்டும் நீங்கிக் கொள்வதாகும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

தொழுகைக்குப் பின் திக்ர்: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.