மாலை திக்ர் (அத்கார் அல்மஸா) பொருளுடன்

ஸஹீஹான ஹதீஸ்களில் வந்துள்ளபடி, மாலையில் அஸ்ர் தொழுகைக்குப் பின்னும் இரவு வரையிலும் ஓதப்படும் திக்ர்கள்.

1 ஒரு முறை

اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ

பொருளும் ஆதாரமும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் காலையை அடைந்தால், இவ்வாறு கூறுவார்கள் : 'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் காலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் மாலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்.' மாலையை அடைந்தால் இவ்வாறு கூறுவார்கள் : 'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் மாலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் காலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்' மேலும் ஒரு தடவை, 'உன்னிடமே மீள்வோம்.' என்றும் கூறினார்கள்.

இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜா ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர் தரம்: நம்பகமானது (ஹஸன்)

விளக்கம்

நபியவர்கள், பஜ்ர் உதயமாகி காலைப்பொழுதை அடைந்தால் இவ்வாறு கூறுவார்கள் :

(யா அல்லாஹ்! நாம் உன்னைக் கொண்டே) உனது பாதுகாப்பிற்கு உட்பட்டவர்களாக, உனது அருளால் அரவணைக்கப்பட்டவர்களாக, உன்னை நினைவு கூறுவதில் ஈடுபட்டவர்களாக, உனது பெயரைக் கொண்டு உதவி தேடியவர்களாக, உனது பேருபகாரத்தினால் உள்வாங்கப்பட்டவர்களாக, உனது பாதுகாப்பினாலும், சக்தியினாலும் இயங்குபவர்களாக (காலையை அடைந்தோம்.) (உன்னைக் கொண்டே மாலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே மரணிப்போம்.) இது முந்திய வசனங்களைக் போன்ற அர்த்தங்களை உள்ளடக்கியிருக்கும். அதேநேரம் அதனை மாலைநேரத்திற்கென மாற்றி, இவ்வாறு கூறவேண்டும் : யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் மாலையை அடைந்தோம். உயிர்ப்பிப்பவன் எனும் உனது பெயரைக் கொண்டே நாம் உயிர்வாழ்கின்றோம். மரணிக்கச் செய்பவன் எனும் உனது பெயர் கொண்டே நாம் மரணிக்கின்றோம். (ஒன்றுசேர்க்கப்படுவது உன்னிடமே) அதாவது, மரணத்திற்குப் பின்னர் எழுப்பப்படுவதும், ஒன்று சேர்ந்த பின்னர் பிரிந்து செல்வதும் உன்னிடமே. எமது நிலை, எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும் இவ்வாறே தொடர்ந்திருக்கும். அவனை விட்டு விலகியோ, அவனை விரோதித்தோ என்னால் இருக்க முடியாது.

அஸ்ருக்குப் பின்னர், அவர் மாலை நேரத்தில் நுழைந்தவுடன் இவ்வாறு கூறுவார் : இவ்வுலகில் மீள்வதும், மறுமையில் ஒதுங்குவதும் உன்னிடமே. நீயே என்னை உயிர்ப்பிக்கின்றாய்! நீயே என்னை மரணிக்கச் செய்கின்றாய்.

பயன்கள்

  • நபியவர்களைப் பின்பற்றி, இந்த துஆவைக் காலையிலும், மாலையிலும் ஓதுவது விரும்பத் தக்கதாகும்.
  • ஓர் அடியான் தனது எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் பால் தேவையுள்ளவனாக உள்ளான்.
  • அத்கார்களை ஓதுவதற்கான மிகச் சிறந்த நேரம், காலையில், பஜ்ர் உதயமாகியது தொடக்கம், சூரியன் உதித்து காலை ஆரம்பிக்கும் நேரம் வரையாகும். மாலையில், அஸ்ர் தொடக்கும் சூரியன் மறைவதற்கு முன்னர் வரையாகும். அதற்குப் பின்னால் அவர் ஓதினால், அதாவது காலையில் ழுஹா நேரம் ஏற்பட்ட பின்னர் ஓதினால் அது நிறைவேறும். ழுஹருக்குப் பின்னால் ஓதினால் அதுவும் நிறைவேறும். மஃரிபுக்குப் பின்னர் ஓதினாலும் நிறைவேறும். அவையும் திக்ர் உடைய நேரங்களே!
  • 'உன்னிடமே ஒன்றுசேர்க்கப்படுவோம்' என்று காலையில் கூறப்படுவது எவ்வாறு பொருத்தமாக உள்ளதென்றால், இது மக்கள் மரணித்த பின்னர் எழுப்பப்படும் நிகழ்வாகிய மீள் எழுப்பல் நிகழ்வை நினைவுபடுத்துகின்றது. ஏனெனில், இது ஒரு புதிய எழுப்பல் ஆகும். உயிர்கள் உடம்பிற்கு மீண்டும் வழங்கப்படும் புதிய ஒரு நாளாகும். மக்கள் இந்நாளில் பரந்து காணப்படுவார்கள். அல்லாஹ் படைத்துள்ள இந்த காலைப்பொழுது மீண்டும் உதித்து, மனிதனுக்கு எதிரான ஒரு சாட்சியாக இருக்கும். அதன் நேரங்களும், பொழுதுகளும் எமது அமல்களுக்கான ஒரு சேமிப்பிடமாக இருக்கும்.
  • 'மீள்வது உன்னிடமே' என்ற வார்த்தை, மாலை நேரத்திற்குப் பொருந்துவதற்கான காரணம், மக்கள் தமது நலன்களுக்காகவும், வாழ்க்கைக்காகவும் பரந்து சென்று தொழில்செய்துவிட்டுத் திரும்பும் போது தமது வீடுகளுக்குத் திரும்புகின்றார்கள். சிதறிய நிலையில் இருந்த அவர்கள் ஓய்வை நோக்கி ஒதுங்குகின்றார்கள். எனவே, ஒதுங்குமிடமாக உள்ள, அல்லாஹ்வை நோக்கி மீள்வது இங்கு நினைவுபடுத்தப்படுகின்றது.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 3 முறை

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

பொருளும் ஆதாரமும்

அபான் இப்னு உஸ்மான் அவர்கள் கூறுகின்றார்கள் : உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூற, தான் கேட்டுள்ளதாக அறிவிக்கின்றார்கள்: "யார், 'பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் பில் அர்ழி வலா பிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம் (எவனுடைய பெயர் இருக்கும் போது, இவ்வானத்திலோ, பூமியிலோ எந்தவொன்றும் தீங்கை ஏற்படுத்தமாட்டாதோ, அந்த அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (காலையை, மாலையை அடைகின்றேன்) அவன் செவிமடுப்பவனாகவும், அறிந்துள்ளவனாகவும் இருக்கின்றான்) என்று மூன்று தடவை கூறுகின்றாரோ, அவர் காலையை அடையும் வரை, அவருக்கு எந்த திடீர் சோதனைகளும் ஏற்படமாட்டாது. யார் காலையை அடையும் போது அவ்வாறு கூறுகின்றாரோ, அவர் மாலையை அடையும் வரை எந்தத் திடீர் சோதனைகளும் ஏற்படமாட்டாது." அபான் இப்னு உஸ்மானுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இந்த ஹதீஸை அவரிடமிருந்து கற்ற மனிதர் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், 'ஏன் என்னைப் பார்க்கின்றீர்கள்?' அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. எனினும், எனக்கு இந்த நோய் ஏற்பட்ட தினம், நான் கோபத்தில் இருந்ததால், எனக்கு இதைக் கூற மறந்துவிட்டது.' என்று கூறினார்கள்.

இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, குப்ரா எனும் நூலில் இாம் நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

இங்கு நபியவர்கள், ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியன் உதிக்க முன்னரும், ஒவ்வொரு நாள் மாலையிலும் சூரியன் மறைய முன்னரும் மூன்று தடவைகள் இந்த துஆவை ஓதுவதன் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்துகின்றார்கள்.

எவனுடைய பெயர் இருக்கும் போது(அதாவது, கூறப்படும் போது), இவ்வானத்திலோ,(மேலும் அதில் இருந்து இறங்கும் சோதனைகளோ) பூமியிலோ (மேலும் அதில் இருந்து வெளிப்படும்) சோதனைகளோ) எந்தவொன்றும் (அது எவ்வளவு பெரியதாக இருப்பினும்) தீங்கை ஏற்படுத்த மாட்டாதோ, அந்த அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (காலையை, மாலையை) அடைகின்றேன் (அவனைக்கொண்டே அனைத்துத் தீங்குகளை விட்டும் பாதுகாப்பும் தேடுகின்றேன்) அவன் (எமது வார்த்தைகளைக்) கேட்பவனாகவும் (எமது நிலைமைகளை) அறிந்தவனாகவும் உள்ளான்.

யார் மாலையை அடையும் போது இவ்வாறு கூறுகின்றாரோ, அவர் காலையை அடையும் வரை திடீர் சோதனைகள் எதுவும் அவருக்கு ஏற்படமாட்டாது. யார் காலையை அடையும் போது இவ்வாறு கூறுகின்றாரோ, அவர் மாலையை அடையும் வரை திடீர் சோதனைகள் எதுவும் அவருக்கு ஏற்படமாட்டாது.

இந்த ஹதீஸை அறிவிக்கும் அபான் இப்னு உஸ்மான் (ரஹ்) அவர்களுக்கு பக்கவாதம் (அதாவது, உடம்பின் ஒரு பாதி செயலிழந்து போதல்) ஏற்பட்டிருந்தது. எனவே, அவரிடம் இந்த ஹதீஸைக் கற்ற மனிதர் ஆச்சரியமாக அவரைப் பார்த்தார். அப்போது அவர் அந்த மனிதரைப் பார்த்து, 'ஏன் என்னைப் பார்க்கின்றீர்கள்?' அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. எனினும், எனக்கு இந்த நோய் ஏற்பட்ட தினம், நான் அதை ஓதவேண்டும் என அல்லாஹ் விதித்திருக்கவில்லை. எனவே, எனக்கு ஒரு கோபம் ஏற்பட்டபோது, நான் மேற்குறிப்பிட்ட இந்த வசனங்களைக் கூற மறந்துவிட்டேன்.' என்று கூறினார்கள்.

பயன்கள்

  • காலையிலும், மாலையிலும் இந்த துஆவை ஓதுவது விரும்பத்தக்கதாகும். அதன் பயனாக, அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரம் அம்மனிதன், திடீர் சோதனைகள், பாதிப்புக்கள் போன்றவை ஏற்படுவதை விட்டும் பாதுகாக்கப்படுவான்.
  • ஆரம்பகால ஸலபுகள் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையும், நபியவர்கள் கூறியவற்றை அவர்கள் உண்மைப்படுத்தியமையும்.
  • திக்ர்கள் காலை, மாலை நேரங்களுக்கும் குறித்துக் கூறப்பட்டிருப்பதன் பயன்களில் ஒன்று, ஒரு முஸ்லிமிடம் பராமுகம் ஏற்படாமல் பாதுகாத்து, தான் அல்லாஹ்வின் அடியான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவைப்பதாகும்.
  • அல்லாஹ்வை நினைவுகூறுபவரின் இறைநம்பிக்கை, உள்ளச்சம், விழிப்புநிலை, உளத்தூய்மை மற்றும் மனவுறுதி என்பவற்றுக்கு ஏற்ப, அந்த திக்ரின் தாக்கமும் உறுதியாக இருக்கும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

3 ஒரு முறை

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي

பொருளும் ஆதாரமும்

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நபியவர்கள் காலையையும், மாலையையும் அடையும் போது பின்வரும் துஆக்களை விடாமல் ஓதி வருவார்கள்: யா அல்லாஹ்! இவ்வுலகிலும், மறுமையிலும் பாதுகாப்பை நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும், எனது உலகத்திலும், எனது குடும்பத்திலும், எனது சொத்துக்களிலும் பாதுகாப்பையும், மன்னிப்பையும் நான் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மறைவிடங்களை மறைத்துவிடுவாயாக! எனது பயத்தை நீக்கி பாதுகாப்பைத் தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலும், பின்னாலும், எனது வலப்புறத்தாலும், இடப்புறத்தாலும், எனக்கு மேலாலும் என்னைப் பாதுகாத்துவிடுவாயாக! எனக்குக் கீழால் எதிர்பார்க்காமல் நான் பிடிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன்.

இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது தரம்: சரியானது

விளக்கம்

நபியவர்கள் காலையையும், மாலையையும் அடையும் போது பின்வரும் துஆக்களை விடாமல் ஓதி வருவார்கள்:

யா அல்லாஹ்! இவ்வுலகிலும், மறுமையிலும் (ஈருலகிலும்) உன்னிடம் (நோய்கள், சோதனைகள், உலகச் சிரமங்கள், மனோ இச்சைகள், மார்க்க ரீதியான குழப்பங்கள் அனைத்தையும் விட்டு) பாதுகாப்பை நான் கேட்கின்றேன்.

யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் (அதாவது, இணைவைப்பு, பித்அத்கள், பாவங்கள் ஆகியவற்றை விட்டும்) எனது உலகத்திலும் (அதாவது, சோதனைகள், நோவினைகள், தீங்குகள் ஆகியவற்றை விட்டும்) எனது குடும்பத்திலும் (அதாவது, எனது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களில்) எனது சொத்துக்களிலும் (எனது பணம் மற்றும் தொழிலில்) பாதுகாப்பையும் (குறைகளை விட்டு ஈடேற்றத்தையும்) (பாவங்களை விட்டு) மன்னிப்பையும் நான் கேட்கின்றேன்.

யா அல்லாஹ்! எனது மறைவிடங்களை மறைத்து விடுவாயாக! (அதாவது, என்னிடமுள்ள குறைகளையும், தவறுகளையும், கவனயீனத்தையும் மறைத்து, எனது பாவங்களை மன்னித்து விடுவாயாக) எனது பயத்தை (அதாவது அச்சத்தையும், திடுக்கத்தையும்) நீக்கி பாதுகாப்பைத் தருவாயாக!

யா அல்லாஹ்! எனக்கு முன்னாலும், பின்னாலும், எனது வலப்புறத்தாலும், இடப்புறத்தாலும், எனக்கு மேலாலும் என்னை (சோதனைகள் மற்றும் நோவினைகளை விட்டுப்) பாதுகாத்துவிடுவாயாக! (இங்கு எல்லாத் திசைகளில் இருந்தும் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் கேட்டமைக்கான காரணம், சோதனைகளும், ஆபத்துக்களும் மனிதனை வந்தடைவது இந்தத் திசைகளில் ஒன்றின் ஊடாகவே)

எனக்குக் கீழால் எதிர்பார்க்காமல் (நான் பராமுகமாக இருக்கும் நிலையில் திடீரென நிலத்துக் கீழ் இழுத்தெடுக்கப்படுவதன் மூலமாக) பிடிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன்.

பயன்கள்

  • நபியவர்களைப் பின்பற்றி, இந்த துஆவைப் பேணி ஓதி வருதல்.
  • மனிதன், மறுமையின் பாதுகாப்பைக் கேட்குமாறு ஏவப்பட்டுள்ளது போன்று, இம்மையின் பாதுகாப்பைக் கேட்குமாறும் ஏவப்பட்டுள்ளான்.
  • தீபீ அவர்கள் கூறுகின்றார்கள் : ஆறு திசைகளையும் குறிப்பிட்டிருப்பதற்கான காரணம், ஆபத்துக்கள் அங்கிருந்துதான் வருகின்றன என்பதனாலாகும். கீழ்த் திசை மிகைப்படுத்தப்பட்டு கூறப்பட்டிருப்பதற்கான காரணம், அதனால் வரும் ஆபத்து மோசமானதாக இருப்பதனாலாகும்.
  • அத்கார்களை ஓதுவதற்கான மிகச் சிறந்த நேரம், காலையில், பஜ்ர் உதயமாகியது தொடக்கம், சூரியன் உதித்து காலை ஆரம்பிக்கும் நேரம் வரையாகும். மாலையில், அஸ்ர் தொடக்கும் சூரியன் மறைவதற்கு முன்னர் வரையாகும். அதற்குப் பின்னால் அவர் ஓதினால், அதாவது காலையில் ழுஹா நேரம் ஏற்பட்ட பின்னர் ஓதினால் அது நிறைவேறும். ழுஹருக்குப் பின்னால் ஓதினால் அதுவும் நிறைவேறும். மஃரிபுக்குப் பின்னர் ஓதினாலும் நிறைவேறும். அவையும் திக்ர் உடைய நேரங்களே!
  • ஏதாவது திக்ர்களுக்கு இரவில் ஒரு குறித்த நேரம் இருப்பதாக ஏதாவது ஆதாரங்கள் வந்தால், - உதாரணமாக, பகராவின் இறுதி இரு வசனங்களை ஓதுவது போன்று – அவை சூரியன் மறைந்த பின்னர் இரவு நேரத்திலேயே ஓதப்படவேண்டும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

4 ஒரு முறை

آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ﴿٢٨٥﴾ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ﴿٢٨٦﴾

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமானதாகும்.'

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

ஸூறா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதியவரை அல்லாஹ் தீங்கு மற்றும் துரதிஷ்டவசமான விபத்து போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறான் என நபியவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள 'கபதாஹு' என்ற வாசகத்திற்கு பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு: இரவுத் தொழகைக்குப் பதிலாக இவ்விரு வசனங்களும் போதுமாகும். இரவில் ஓத வேண்டிய ஏனைய திக்ருகளுக்குப் பதிலாக இதுவொன்றே போதுமாகும். இரவுத் தொழுகையில் ஓத வேண்டிய அதி குறைந்த பட்ச அளவு இவ்விரு வசனங்களுடைய அளவாகும். குறிப்பிட்ட வார்த்தையானது மேற்கண்ட அனைத்து கருத்துக்களையும் உள்ளடக்கிக்கொள்ளவதற்கு வாய்ப்புண்டு.

பயன்கள்

  • ஸூரா பகராவின் இறுதிப் பகுதியின் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது. ஸுறா பகராவின் இறுதிப்பகுதி என்பது 'ஆமனர்ரஸூலு' என்பதிலிருந்து ஆரம்பித்து ஸுறாவின் இறுதிவரையிலாகும்.
  • இரவில் ஸூறா பகராவின் இறுதிப் பகுதியை ஓதியவரை கெடுதி, தீங்கு, ஷைதான் ஆகியவற்றை விட்டும் பாதுகாக்கின்றது.
  • இரவு என்பது சூரிய அஸ்தனமத்துடன் ஆரம்பித்து பஜ்ர் -வைகறை உதயத்துடன் முடிவடைகிறது.

HadeethEnc.com இல் படிக்கவும்

5 10 முறை

لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : 'யார் ஒருவர்; 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' (பொருள்: உண்மையான வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாறுமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்குரியதே! அவன் யாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக உள்ளான் என 10 தடவைகள் கூறினால் அவர் இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியிலிருந்து நான்கு அடிமைகளை உரிமையிற்றவரைப் போன்றவராவார்'.

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' என்பதன் கருத்து அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியவானவன் வேறு யாரும் கிடையாது. அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. அவன் மாத்திரமே முழுமையான ஆட்சி அதிகாரகத்துக்கு உரித்துடையவன். அத்துடன் ஏனையோரைத் தவிர்த்து நேசம்கொள்ளுதல் மற்றும் மகிமைப்படுத்துதல் என்ற விடயங்களுடன் பாராட்டுக்கும் புகழுக்கும் தகுதியானவன். அவன் ஆற்றல் மிக்கவன் அவனை எதனாலும் இயலாமல் செய்திட முடியாது என்பதாகும். ஆகவே இந்த மகத்தான திக்ரை யார் ஒரு நாளில் பத்து தடவைகள் கூறினால் இஸ்மாஈல் இப்னு இப்ராஹீம் அலைஹிமஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளில் உள்ள அடிமைகளில் நான்கு அடிமைகளை உரிமையிட்ட நன்மை அவருக்கு கிடைக்கிறது. இங்கு இஸ்மாஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் சந்ததிகள் என குறிப்பிட்டு கூறக்காரணம் அவர்கள் ஏனையோரை விடவும் சிறப்புக்குரியவர்கள் என்பதினாலாகும்.

பயன்கள்

  • இந்த திக்ரானது அல்லாஹ்வை -உலூஹிய்யாவில் -இறைமைத்துவத்திலும் ஆட்சி அதிகாரம் ,புகழ் மற்றும் முழுமையான ஆற்றல் ஆகியவிடயங் களிலும் தனித்துவமானவன் என்பதை உள்ளடக்கி சிறப்புப் பெற்றுள்ளது.
  • இந்த திக்ரை ஒரே நேரத்தில் தொடராகவோ அல்லது விட்டுவிட்டோ கூறினாலும் இந்த திக்ரை ஒதியதற்கான கூலி கிடைக்கும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

6 100 முறை

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

பொருளும் ஆதாரமும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" வபிஹம்திஹி' ( பொருள்: அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என 100 தடவைகள் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் நுரையளவு போல் இருப்பினும் அவை மன்னிக்கப்பட்டு விடும்'.

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

யார் தினமும் 'ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' (அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என்ற வார்த்தையை –தஸ்பீஹை- கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் அலையின் போதும் கடல் கொந்தளிக்கும் போதும் எழும் நுரையின் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் அவை அழிக்கப்பட்டு மன்னிக்கப் பட்டுவிடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.

பயன்கள்

  • மேற்படி திக்ரைத் நாளொன்றில்; தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ, எவ்வாறு கூறினாலும் அவருக்கான இந்தக் கூலி கிடைக்கும்.
  • தஸ்பீஹ் என்பது : அல்லாஹ்வை அனைத்து வகையான குறைகளைவிட்டும் தூய்மைப் படுத்துவதைக் குறிக்கும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே): என்பது நேசித்து ,போற்றப்டுவதற்குரிய பரிபூரண பண்பால் வர்ணிக்கப்படுதல்.
  • இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள 'பாவம் மன்னிக்கப்படுதல்' என்பதன் கருத்து சிறிய பாவங்களைக் குறிக்கிறது. பெரும் பாவங்களுக்கு தவ்பா செய்வது அவசியமாகும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

மாலை திக்ர்: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

கவுண்டர் எப்படி வேலை செய்கிறது?

ஒரு திக்ரின் கீழ் உள்ள கவுண்டரைத் தட்டினால் அது பூஜ்ஜியம் வரை குறைந்து எண்ணும். இது இந்தப் பக்கத்தில் மட்டுமே, எதுவும் சேமிக்கப்படுவதில்லை.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.