நேர்வழி மற்றும் உறுதியான உள்ளத்திற்கான துஆ

நேர்வழி, இறையச்சம் மற்றும் ஈமானில் உறுதியாக நிற்கும் உள்ளத்திற்கான துஆக்கள்.

1 ஒரு முறை

اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي

பொருளும் ஆதாரமும்

அலீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இவ்வாறு கூறினார்கள் : 'அல்லாஹும்மஹ்தினீ, வ ஸத்தித்னீ' (இறைவா! எனக்கு நல்வழி காட்டுவாயாக! நேர்மையானதைச் சரியாகச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திப்பீராக. அப்போது (வழி தவறியவனுக்குச் சரியான) வழியை நீர் காட்டுவதையும், (வளைந்த) அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக' என்று கூறினார்கள்.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், அல்லாஹ்விடம் பின்வருமாறு பிரார்த்தித்துக் கேட்குமாறு கூறுகின்றார்கள் : யா அல்லாஹ்! எனக்கு நல்வழி காட்டுவாயாக! என்னை நேர்வழிப்படுத்துவாயாக! மேலும், நேர்மையானதைச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக! அதில் எனக்கு அருள் புரிவாயாக! எனது எல்லா விவகாரங்களிலும் சரியானவனாக என்னை ஆக்கிவிடுவாயாக!

ஹுதா என்பது, சத்தியத்தைப் பொதுவாகவும், விளக்கமாகவும் அறிந்துகொள்வதோடு, உள்ளத்தாலும், உறுப்புக்களாலும் அதனை நடைமுறைப்படுத்த அருள்புரியப்படுவதுமாகும்.

ஸதாத் என்பது, சத்தியத்தின் மீது சரியாக இருக்கும் விதத்தில், உறுதியாக இருப்பதற்கு அருள் புரியப்படுவதாகும். அதாவது, சொல், செயல், நம்பிக்கை என அனைத்திலும் நிலையான பாதையில் இருப்பதாகும்.

அர்த்தம் சார்ந்த அம்சங்கள், புலன் சார்ந்த அம்சங்கள் ஊடாகவே தெளிவாகப் புரியப்படுவதால், இந்த துஆவை நீங்கள் ஓதும் போது, (வழி தவறியவனுக்குச் சரியான) வழியை நீர் காட்டுவதையும், (வளைந்த) அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக. நேர்வழிகாட்டலை நீ கேட்கும் போது, பயணத்தில் இருப்பவனுக்கு வழிகாட்டுவதை நினைவில் கொள்வாயாக! ஏனெனில், அவன் வழிதவறிப் போய்விடக் கூடாது என்ற பயத்தில், வலப்பக்கமோ, இடப்பக்கமோ திரும்பாமல் நேராகவே செல்வான். அப்போது தான், ஈடேற்றமாக, தனது இலக்கைத் துரிதமாக அடைந்துகொள்ளலாம்.

நேர்த்தி என்பதன் மூலம், அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக. அம்பை நேராக நிமிர்த்தி வைக்கும் போது, அது வேகமாகச் சென்று, இலக்கை அடைவதை நீ காண்பாய். எறிபவன் ஒரு இலக்கை நாடினால், அந்த இலக்கை நோக்கி, அம்பை நேராக எறிவான். அவ்வாறு தான் அல்லாஹ்விடம் அந்த நேர்த்தியை ஓர் அம்பின் வடிவில் எண்ணிக் கேளுங்கள். எனவே, நீங்கள் உங்களது பிரார்த்தனை, நேர்வழி எனும் இலக்கையும், நேர்த்தியின் தீர்ச்சையையும் அடைவதைக் கேட்பதாக அமையும்.

நீங்கள் அல்லாஹ்விடம் நேர்த்தியைக் கேட்கும் போது, இந்த அர்த்தத்தை உள்ளத்தால் எண்ணிக் கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் கேட்பது, எறிவதற்காக நீங்கள் பயன்படுத்தும் ஈட்டியைப் போல இருக்கும்.

பயன்கள்

  • பிரார்த்திப்பவர், தனது அமல்களை, ஸுன்னாவைப் பின்பற்றுதனூடாகவும், உளத்தூய்மையைப் பேணுவதன் ஊடாகவும் நேர்த்தியானவும், சீராகவும் வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும்.
  • ஆழமான அர்த்தத்தை உள்ளடக்கியுள்ள இந்த துஆவை, அருளையும், நேர்த்தியையும் பெற்றுக்கொள்வதற்காகக் கேட்கவேண்டும்.
  • ஓர் அடியான் தனது அனைத்து விவகாரங்களிலும், அல்லாஹ்விடம் உதவி கேட்கவேண்டும்.
  • கற்பித்தல் சந்தர்ப்பங்களில் உதாரணம் கூறல்.
  • நேர்வழி, நிலைமை சீராக இருத்தல், சற்றும் வழிதவறாமல் நிலையாக இருத்தல், மறுமை சீராக இருத்தல் போன்றவற்றை ஒன்றாகக் கேட்டுப் பிரார்த்தித்தல். 'நேர்வழிப்படுத்துவாயாக!' என்று கேட்பதன் அர்த்தம், நேர்வழிப் பாதையிலேயே செல்பவனாக இருக்கவேண்டும் என்று கேட்பதாகும். 'நேர்த்தியாக வைப்பாயாக' என்பதன் அர்த்தம், அடைந்துகொண்ட சத்தியத்தில் இருந்து விலகிச் செல்லாமல் பாதுகாத்து வைப்பாயாக என்று கேட்பதாகும்.
  • பிரார்த்திப்பவர் தனது பிரார்த்தனைகளில் கூடுதல் கவனம் செலுத்தி, அப்பிரார்த்தனைகளிள் அர்த்தங்களையும் மனக்கண் முன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 ஒரு முறை

اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى، وَالْعَفَافَ وَالْغِنَى

பொருளும் ஆதாரமும்

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுபவர்களாக இருந்தார்கள் : யா அல்லாஹ்! நான் உன்னிடம், நேர்வழியையும், இறையச்சத்தையும், பத்தினித்தனத்தையும், தன்நிறைவையும் கேட்கின்றேன்.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு துஆக் கேட்பார்கள் : யா அல்லாஹ்! நான் உன்னிடம், நேர்வழியையும், (அதாவது, சத்தியத்தை அறிந்து, அதை நடைமுறைப்படுத்தும் நிலையான பாதையை) இறையச்சத்தையும், (அதாவது, கடமைகளை நிறைவேற்றி, தடைகளைத் தவிர்ப்பதையும்) பத்தினித்தனத்தையும், (அதாவது, அனுமதிக்கப்படாத, முறையற்ற சொல், செயற்களை விட்டும் விலகி நிற்கும் நிலையையும்) தன்நிறைவையும் (அதாவது, படைப்புக்களிடம் தேவை காணாமல், தனது ரப்பாகிய அல்லாஹ்விடம் மாத்திரமே தேவை காணும் நிலையை) கேட்கின்றேன்.

பயன்கள்

  • நேர்வழி, இறையச்சம், பத்தினித்தனம், தன்னிறைவு ஆகிய இந்தப் பண்புகளின் சிறப்பு. மேலும் அவற்றைக் கடைப்பிடிக்க ஆர்வமூட்டல்.
  • நபியவர்கள் கூட, தமக்குத்தாமே எந்த நலவையோ, தீங்கையோ செய்ய சக்தியற்றவர்கள். அதற்கு சக்திபெற்றவன் அல்லாஹ் மாத்திரமே.
  • நன்மை செய்தல், தீங்கிழைத்தல், படைப்புக்களுக்கு நேர்வழி காட்டல் என அனைத்துக்கும் சக்தி பெற்றவன் அல்லாஹ் மாத்திரமே. நெருக்கமான ஒரு மலக்காலோ, தூதராக அனுப்பப்பட்ட ஒரு நபியாலோ அல்லது வேறு எவராலுமோ அதைச் செய்ய முடியாது.

HadeethEnc.com இல் படிக்கவும்

3 ஒரு முறை

اللهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ

பொருளும் ஆதாரமும்

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யா அல்லாஹ்! எனது மார்க்கத்தை எனக்கு சீர்செய்து தருவாயாக! அதுவே எனது விவகாரங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது. எனது உலக வாழ்வையும் சீர்செய்து தருவாயாக! அதில் தான் எனது வாழ்ப்பு உள்ளது. எனது மறுமையையும் எனக்குச் சீர்செய்து தருவாயாக! அதில் தான் எனது மீளுதல் உள்ளது. இந்த வாழ்க்கையை எனக்கு எல்லா நலவுகளையும் அதிகப்படுத்தித் தரும் ஒன்றாக ஆக்கிவிடு. மரணத்தை எனக்கு அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுதலையாக ஆக்கிவிடு.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

நபியவர்கள் எந்த நற்குணங்களைப் பரிபூரணப்படுத்த அனுப்பப்பட்டார்களோ, அவற்றின் அடிப்படைகளான, மார்க்கம் சீராக இருத்தல், மேலும், உலகம் மற்றும் மறுமை சீராக இருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும் விதமான ஒரு துஆவைக் கேட்கின்றார்கள். இந்த சுருக்கமான வாசகம், இம்மூன்று அம்சங்களும் சீராக இருப்பதை வேண்டுவதை உள்ளடக்கியுள்ளது. முதலில் மார்க்கம் சீராக இருப்பதைக் கேட்கின்றார்கள். அதைக் கொண்டுதான் ஈருலக வாழ்வும் சீராக இருக்கப் போகின்றது :

(யா அல்லாஹ்! எனது மார்க்கத்தை சீராக்கித் தருவாயாக!) அதாவது, அதன் ஒழுக்கங்களை முழுமையான, பரிபூரண விதத்தில் நிறைவேற்ற எனக்கு அருள் புரிவாயாக!

(அதுவே எனது விவகாரங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது) அது எனது அனைத்து விடயங்களையும் பாதுகாக்கக் கூடியது. எனவே, எனது மார்க்கம் சீர்க்கெட்டுவிட்டால், எனது எல்லா விவகாரங்களும் சீர்க்கெட்டுவிடும். நான் நட்டமடைந்து, தோற்றுவிடுவேன். மார்க்கம் எதிர்பார்க்கப்படும் விதத்தில் சீராக இருப்பதென்பது, உலகம் சீராக இருப்பதனாலே முழுமை பெறும் என்பதனால், பின்வருமாறு கூறினார்கள் :

(எனது உலக வாழ்வையும் சீர்செய்து தருவாயாக!)

அதாவது, எனக்கு உடல் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும், நல்ல மனைவியையும், நல்ல பிச்சலத்தையும், மேலும் எனக்குத் தேவையானவற்றையும் தருவதன் மூலம். அவை ஹலாலானதாகவும், உன்னை வழிப்படுவதற்கு உதவிசெய்யக்கூடியவையாகவும் இருக்கவேண்டும். பின்பு, அதை சீர்செய்து தருமாறு கேட்பதில் உள்ள நியாயத்தைக் கூறுகின்றார்கள் :

(அதில் தான் எனது வசிப்பு உள்ளது) அதாவது, நான் வாழும் இடம், எனது வாழ்நாட்கள்.

(எனது மறுமையையும் எனக்குச் சீர்செய்து தருவாயாக! அதில் தான் எனது மீளுதல் உள்ளது.) அதாவது, உன்னை சந்திப்பதற்காக நான் மீள்வது. அதாவது, எனது அமல்கள் சீராக இருக்கவேண்டும். வணக்கவழிபாடுகள், உளத்தூய்மை மற்றும் நல்ல இறுதிமுடிவு என்பவற்றிற்கு அல்லாஹ் அடியானுக்கு அருள் புரியவேண்டும்.

நபியவர்கள் உலகிற்குப் பின்னர் மறுமையைக் கூறியிருப்பதற்கான காரணம், முதலாவதுதான், இரண்டாவது சீராக இருப்பதற்கான ஒரு வழிமுறையாக இருக்கின்றது. இவ்வுலகில் யார், அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப சீராக இருக்கின்றாரோ, அவரது மறுமை சீராக அமைந்துவிடும். அவர் சுபீட்சத்துடன் இருப்பார்.

(இந்த வாழ்க்கையை) மேலும், நீண்ட வாழ்நாளையும் (எனக்கு எல்லா நலவுகளையும் அதிகப்படுத்தித் தரும் ஒன்றாக ஆக்கிவிடு.) நான் நல் அமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். (மரணத்தை) அதை அவசரமாகத் தருவதை (எனக்கு அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுதலையாக ஆக்கிவிடு) அதாவது, சோதனைகள், குழப்பங்கள், மேலும், பாவங்களையும், பராமுகத்தையும் கொண்டு சோதிக்கப்படுதல் என்பவற்றில் இருந்தும் மேலும், உலக சிரமங்களில் இருந்தும், அதன் தெளிவற்ற நிலையில் இருந்தும்,

பயன்கள்

  • மார்க்கம் தான் மிகப் பிரதானமானது. அதனால்தான் நபியவர்கள் துஆவில் முதலில் அதனைக் கேட்டுள்ளார்கள்.
  • மார்க்கம் என்பது மனிதனுக்கு ஒரு பாதுகாப்பாகும். அனைத்துத் தீமைகளையும் விட்டு அவனை அது பாதுகாக்கின்றது.
  • மார்க்கமும், மறுமையும் சீராக இருப்பதற்காக வேண்டி, உலக விவகாரங்களையும் துஆக்களில் கேட்டல்.
  • மார்க்கத்தில் குழப்பம் வந்துவிடும் என்ற பயத்திலோ, இறைபாதையில் உயிர்நீப்பதை அல்லாஹ்விடம் கேட்கும் அடிப்படையிலோ, மௌத்தை ஆசைப்படுவது வெறுக்கப்படமாட்டாது.

HadeethEnc.com இல் படிக்கவும்

4 ஒரு முறை

يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

பொருளும் ஆதாரமும்

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகமாக ' யா முகல்லிபல் குலூப் ஸப்பித் கல்பி அலா தீனிக '- (பொருள்) உள்ளங்களை புரட்டுபவனே! என்னுடைய உள்ளத்தினை உனது மார்க்கத்தில் நிலைத்து இருக்க வைப்பாயாக' என அதிகம் கூறுபவர்களாக இருந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாம் உம்மையும் நீங்கள் கொண்டுவந்தவற்றையும் விசுவாசம் கொண்டுள்ளோம். அவ்வாறிருந்தும் எம்மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள், ஆம் என்று கூறிவிட்டு, 'நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்' என பதிலளித்தார்கள்.

இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது தரம்: சரியானது

விளக்கம்

நபியவர்கள் அதிகம் தனது பிரார்த்தனையில், மார்க்கத்திலும், வணக்க வழிபாட்டிலும் ஸ்திரத்தன்மையையும் உறுதியையும் அல்லாஹ்விடம் வேண்டுபவர்களாகவும், தடம் புரள்தல் மற்றும் வழிகேடு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பையும் கோருபவர்களாகவும் இருந்தார்கள். இந்த துஆவை நபியவர்கள் அதிகம் ஓதுவதைக் பார்த்து அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அப்போது நபியவர்கள் அவரிடத்தில் 'உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்' எனக் கூறினார்கள். உள்ளமானது இறைவிசுவாசம் மற்றும் இறைநிராகரிப்பின் உரைவிடமாகும். உள்ளமானது ஒரே நிலையில் இல்லாது அடிக்கடி நிலைமாறுவதினால் அரபியில் கல்ப் என அழைப்பர். அது மாத்திரமின்றி அதிக வெப்பத்தில் கொதிக்கும் பானையில் உள்ள தண்ணீரை விடவும் உள்ளமானது கொந்தளிக்கக் கூடியது. எனவே யாருக்கு அல்லாஹ் உறுதியை நாடுகிறானோ அவனது உள்ளத்தை நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்யவும், மார்க்கத்தில் உறுதியாக இருக்கும் வாய்ப்பையும் வழங்குகிறான். யாரை அல்லாஹ் நேர்வழியிலிருந்து திருப்ப நாடுகிறானோ அவனை தடம்புரளல் மற்றும் வழிகேட்டின் பால் விட்டுவிடுகிறான்.

பயன்கள்

  • நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தம் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து, பணிவுடன் நடந்து கொண்டு, அவனிடம் மன்றாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆகவே இஸ்லாமிய உம்மத்தும் இதே பிரார்த்தனையைச் செய்யுமாறு இந்த ஹதீஸில் வழிகாட்டப்பட்டுள்ளமை.
  • மார்க்கத்தின் மீது பற்றும் உறுதியும் கொள்வதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு எல்லா விவகாரமும் இறுதி முடிவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்பதையும் இந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுகிறது.
  • ஒர் அடியான எப்போதும் இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு அல்லாஹ்வின் உதவி தேவைப்படுகிறது.
  • நபியின் முன்மாதிரியைப் பின்பற்றி, இந்த துஆவை அதிகம் ஓதுமாறு வலியுறுத்தப்பட்டிருத்தல்.
  • இஸ்லாத்தில் உறுதியாக இருத்தல் என்பது இறைவனின் மிகப்பெரும் அருட்கொடையாகும், அதற்காக அடியான் தனது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

5 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'நிச்சயமாக மனித இதயங்கள் யாவும் கருணையாளனாகிய அல்லாஹ்வின் விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையே ஒரு இதயம் போன்று உள்ளது. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று கூறிவிட்டு (அல்லாஹும்ம முஸர்ரிபல் கூலுப் ஸர்ரிப் கல்பி அலா தாஅதிக) ' உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனக்கு கீழ்படிந்து நடப்பதின்பால் திருப்பிவிடுவாயாக!' என்று குறிப்பிட்டார்கள்.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

மனிதர்களின் இதயங்கள் அனைத்தும் அர்ரஹ்மானின் இரண்டு விரல்களுக்கிடையில் ஒரே இதயம் போல உள்ளன என நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவன் விரும்பிய வாறு அவற்றை கையால்கிறான். அந்த வகையில் அவன் விரும்பினால் அதனைச் சத்தியத்தின் மீது நிலைப்படுத்துவான். விரும்பினால் அதனைச் சத்தியத்திலிருந்து விலக்கி விடுவான். அனைத்து இதயங்களையும் மாற்றுவது அவனுக்கு ஒரு இதயத்தை மாற்றுவது போன்றாகும். இச்செயற்பாடானது அவனை வேறு எந்தக் காரியத்திலிருந்து தடுக்காது. பின்னர் நபி (ஸல்) அவர்கள் பின்வறுமாறு பிரார்த்தனை செய்தார்கள் : யா அல்லாஹ் இதயங்களைத் திருப்புபவனே! இதயங்களை சிலபோது கீழ்ப்படிதலின்பாலும் சிலபோது பாவத்தின்பாலும் சிலபோது உன்னை ஞாபகப்பபடுத்தவும் சில போது உனது ஞாபகத்தை விட்டு அலட்சியத்தின் பாலும் திருப்பும்போது - எங்கள் இதயங்களை உனக்கு கட்டுப்பட்டுப்பட்டு நடப்பதின் பால் திருப்பி விடுவாயாக.

பயன்கள்

  • இறைவிதியை (கத்ர்) உறுதிப்படுத்தல். அல்லாஹ் தனது அடியார்களின் இதயங்களை அவர்களுக்காக முன்கூட்டியே எழுதிய(கத்ரின்) கட்டளையின்படி திருப்புகிறான்.
  • ஒரு முஸ்லிம் எப்போதும் தனது இரட்சகனிடம் சத்தியம் மற்றும் நேர்வழியில் நிலைத்திருப்பதற்கான உறுதியைக் கேட்க வேண்டும்.
  • அல்லாஹ்வை அஞ்சி நடப்பதோடு இணையில்லா ஏகனான அவனிடமே இறுக்கமான தொடர்பை பேணுதல்.
  • இமாம் ஆஜுர்ரீ இவ்வாறு கூறுகின்றார்கள் : சத்தியவாதிகள் அல்லாஹ்வை, அவனே வர்ணித்தவைகளைக் கொண்டும், நபி (ஸல்) அவர்கள் வர்ணித்தவைகளைக் கொண்டும், நபித்தோழர்கள் வர்ணித்தவைகளைக் கொண்டும், வர்ணிப்பார்கள். நூதனங்களை உருவாக்காது, நபியைப் பின்பற்றிய அறிஞர்களின் போக்கு இதுவாகும். அதாவது, அஹ்லுஸ் ஸுன்னாக்கள், அல்லாஹ் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ள பெயர்களையும், பண்புகளையும், திரிபு படுத்தாமல், கருத்துக்களை மறுக்காமல், உருவகப் படுத்தாமல், ஒப்பாக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். அல்லாஹ் தன்னை விட்டும் மறுத்தவற்றை அவர்களும் மறுப்பார்கள். ஏற்றுக்கொண்டோ, மறுத்தோ வராதவைகள் பற்றி அவர்கள் மௌனித்திருப்பார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: 'அவனைப் போன்று எதுவுமில்லை. நிச்சயமாக அவனே அதிகம் கேட்பவன், மற்றும் பார்ப்பவன்.'

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

நேர்வழிக்கான துஆ: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.