மக்கள் கேட்கும் கேள்விகள்

பாடம் 4 / 11

நபி முஹம்மது ﷺ குர்ஆனை எழுதினாரா?

சுருக்கமான பதில்

குர்ஆன் முஹம்மது ﷺ அவர்களின் வார்த்தை அல்ல, அல்லாஹ்வின் வார்த்தை என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். நபி ﷺ அவர்களுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. நாற்பது வயதில் மக்காவுக்கு அருகிலுள்ள ஹிரா குகையில் தொடங்கி, வானவர் ஜிப்ரீலிடமிருந்து அவர் குர்ஆனைப் பெற்றார். அவர் தன் விருப்பப்படி எதையும் கூறுவதில்லை என்று குர்ஆன் கூறுகிறது. அதைச் சந்தேகிக்கும் எவரும் அது போன்ற ஓர் அத்தியாயத்தையாவது கொண்டுவருமாறு அது சவால் விடுகிறது.

கபஸ் எழுதியது, அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் கரீம், தஃப்ஸீர் இப்னு கஸீர், HadeethEnc.com விளக்கங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது.

குர்ஆனிலிருந்து

وَمَا كُنتَ تَتۡلُواْ مِن قَبۡلِهِۦ مِن كِتَٰبٖ وَلَا تَخُطُّهُۥ بِيَمِينِكَۖ إِذٗا لَّٱرۡتَابَ ٱلۡمُبۡطِلُونَ ﴿٤٨﴾

48. (நபியே!) நீர் இதற்கு முன்னர் ஒரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உமது கையால் நீர் அதை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (இதை நீர் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம்.

Al-'Ankabut 29:48குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

48. -தூதரே!- குர்ஆனுக்கு முன்னர் நீர் எந்த வேதத்தையும் படித்துக் கொண்டிருக்கவில்லை. உம் வலக்கரத்தால் எழுதக்கூடியவராக நீர் இருந்ததில்லை. நிச்சயமாக நீர் எழுதவோ படிக்கவோ தெரியாத உம்மீயாக இருந்தீர். நீர் படிக்கக்கூடியவராக, எழுதக்கூடியவராக இருந்திருந்தால் மக்களில் மூடர்கள் உம் தூதுத்துவத்தில் சந்தேகம் கொண்டிருப்பார்கள்; நீர் முந்தைய வேதங்களிலிருந்துதான் எடுத்து எழுதுகின்றீர் என்று கூறியிருப்பார்கள்.

مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ ﴿٢﴾ وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ ﴿٣﴾ إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ ﴿٤﴾ عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ ﴿٥﴾

2. (நம் தூதராகிய) உங்கள் தோழர் வழி தவறி விடவுமில்லை; தவறான வழியில் செல்லவுமில்லை. 3. அவர் தன் விருப்பப்படி எதையும் கூறுவதில்லை. 4. இது அவருக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டதே தவிர (வேறு) இல்லை. 5. (ஜிப்ரயீல் என்னும்) வலுவான ஆற்றலுடையவர் இதை அவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்.

An-Najm 53:2-5குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

2. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நேரான பாதையைவிட்டும் தவறவுமில்லை; அவர் வழிகெட்டவராகவும் இல்லை. ஆனால் அவர் நேர்வழி பெற்றவராக இருக்கின்றார்.

3. தம் மன இச்சைக்கேற்ப அவர் இந்தக் குர்ஆனைக் கூறுவதில்லை.

4. இந்தக் குர்ஆன் ஜிப்ரீல் மூலமாக அல்லாஹ் அறிவித்த வஹியேயாகும்.

5. கடும் வல்லமையுடைய வானவர் ஜிப்ரீல்தான் அவருக்கு இதனைக் கற்றுக் கொடுத்தார்.

وَمَا كَانَ هَٰذَا ٱلۡقُرۡءَانُ أَن يُفۡتَرَىٰ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن تَصۡدِيقَ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَتَفۡصِيلَ ٱلۡكِتَٰبِ لَا رَيۡبَ فِيهِ مِن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٣٧﴾ أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ فَأۡتُواْ بِسُورَةٖ مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ مَنِ ٱسۡتَطَعۡتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٣٨﴾

37. இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) தவிர (மற்ற எவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதல்ல. மேலும், இதற்கு முன்னுள்ள வேதங்களை இது உண்மையாக்கி வைத்து அவற்றில் உள்ளவற்றை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. ஆகவே, (இது) உலகத்தாரின் இறைவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை. 38. இதை (நம் தூதராகிய) ‘‘அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்'' என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின் நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமானவர்கள் அனைவரையும் (உங்களுக்குத் துணையாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,) இதிலுள்ளதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்.''

Yunus 10:37-38குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

37. இந்த அற்புதமான குர்ஆன் புனைந்துரைக்கப்படவோ அல்லாஹ்வைத் தவிர உள்ள யாருக்கும் சேர்க்கப்படவோ முடியாது. ஏனெனில் அது போன்ற ஒன்றை மனிதர்களால் கொண்டுவரவே முடியாது. ஆயினும் இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் அவற்றில் சுருக்கமாக கூறப்பட்ட சட்டதிட்டங்களை சிறந்த முறையில் தெளிவுபடுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. எனவே அது படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து இறங்கியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

38. நிச்சயமாக “முஹம்மது இந்த குர்ஆனை சுயமாகப் புனைந்து கொண்டு அல்லாஹ்வின் வார்த்தை என்று பொய் கூறுகிறார்” என்று இந்த இணைவைப்பாளர்கள் கூறுகிறார்களா? -தூதரே!- நீர் அவர்களுக்கு மறுப்பாக கூறுவீராக: “நான் இதனை சுயமாகப் புனைந்து கொண்டுவந்திருந்தால் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; எனவே இதுபோன்ற ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். குர்ஆன் புனைந்து கூறப்பட்டது என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களால் அழைக்க முடிந்தவர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு அதனைச் செய்யுங்கள். உங்களால் ஒருபோதும் இவ்வாறு செய்ய முடியாது. நீங்கள் மொழிச் சொந்தக்காரர்களாகவும் இலக்கிய ஜாம்பவான்களாகவும் இருந்தும் உங்களால் அவ்வாறு கொண்டுவர முடியாமை குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது என்பதற்கான சான்றாகும்.

எல்லா பாடங்களும்