பாடம் 3 / 11
ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டதாக முஸ்லிம்கள் நம்புகிறார்களா?
சுருக்கமான பதில்
இல்லை. ஈஸா நபியை அவர்கள் கொலை செய்யவும் இல்லை, சிலுவையில் அறையவும் இல்லை, மாறாக அவர்களுக்கு அவ்வாறு தோன்றச் செய்யப்பட்டது, அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டான் என்று குர்ஆன் கூறுகிறது. அவர் அல்லாஹ்விடம் உயிருடன் இருக்கிறார் என்றும், ஸஹீஹான ஹதீஸ்கள் கூறுவது போல் இறுதிக் காலத்திற்கு முன் திரும்ப வருவார் என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இரு தரப்பினரும் ஈஸா நபியை ஆழ்ந்து கண்ணியப்படுத்தினாலும், இஸ்லாம் கிறிஸ்தவ நம்பிக்கையிலிருந்து வேறுபடும் அம்சங்களில் இதுவும் ஒன்று.
கபஸ் எழுதியது, அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் கரீம், தஃப்ஸீர் இப்னு கஸீர், HadeethEnc.com விளக்கங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது.
குர்ஆனிலிருந்து
وَقَوۡلِهِمۡ إِنَّا قَتَلۡنَا ٱلۡمَسِيحَ عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمۡۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِيهِ لَفِي شَكّٖ مِّنۡهُۚ مَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّۚ وَمَا قَتَلُوهُ يَقِينَۢا ﴿١٥٧﴾ بَل رَّفَعَهُ ٱللَّهُ إِلَيۡهِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا ﴿١٥٨﴾
157. மேலும், ‘‘அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்துவிட்டோம்'' என்று அவர்கள் கூறியதனாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்துவிட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அதில் அவர்களுக்கு உண்மையான ஞான (ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை. 158. எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
வசனங்களின் விளக்கம்
157. நாங்கள்தாம் அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் ஈஸாவைக் கொலைசெய்தோம் என்று பெருமையாகக் கூறியதனாலும் நாம் அவர்களைச் சபித்துவிட்டோம். அவர்கள் கூறுவதுபோல, அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை. ஈஸாவின் தோற்றத்தை அல்லாஹ் வழங்கிய வேறொரு மனிதரையே அவர்கள் கொன்று சிலுவையில் அறைந்தார்கள். ஈஸாதான் கொல்லப்பட்டவர் என்று எண்ணிக்கொண்டார்கள். அவரை நாங்கள்தாம் கொன்றோம் என்று கூறிய யூதர்களும் ஈஸாவை அவர்களிடம் ஒப்படைத்த கிருஸ்தவர்களும் ஈஸாவின் விஷயத்தில் கடுமையான சந்தேகத்திலும் தடுமாற்றத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது குறித்து எந்த அறிவும் இல்லை. அவர்கள் வெற்று யூகங்களையே பின்பற்றுகிறார்கள். சத்திய விஷயத்தில் யூகம் எந்தப் பயனையும் அளிக்காது. உறுதியாக அவர்கள் ஈஸாவைக் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை.
158. மாறாக அல்லாஹ் அவர்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவரது உடலோடும் உயிரோடும் அல்லாஹ் அவரை உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன் நிர்வகித்தல், விதிகள், சட்டங்கள் என்பவற்றில் அவன் ஞானமிக்கவன்.
إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَىٰٓ إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ ٱلَّذِينَ كَفَرُواْ وَجَاعِلُ ٱلَّذِينَ ٱتَّبَعُوكَ فَوۡقَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۖ ثُمَّ إِلَيَّ مَرۡجِعُكُمۡ فَأَحۡكُمُ بَيۡنَكُمۡ فِيمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ ﴿٥٥﴾
55. (ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக!: ‘‘ஈஸாவே நிச்சயமாக நான் உமக்கு (உமது) ஆயுளை முழுமைப்படுத்துவேன். உம்மை நம்மளவில் உயர்த்திக்கொள்வேன். நிராகரிப்பவர்களி(ன் அவதூறி)லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கிவைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்கள் மீது இறுதி நாள்வரை மேலாக்கியும் வைப்பேன்'' (என்று கூறி, ஈஸாவே! அந்நிராகரிப்பவர்களை நோக்கி, நான் கூறியதாக நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வாகிய) என்னிடமே நீங்கள் மீண்டும் வருவீர்கள். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவற்றைப் பற்றி (அந்நேரத்தில்) நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்'' (என்றும் கூறினான்.)
வசனங்களின் விளக்கம்
55. அல்லாஹ் அவர்களின் விஷயத்தில் சூழ்ச்சி செய்தான். அவன் ஈசாவிடம் கூறினான்: “ஈசாவே! மரணிக்கச் செய்யாமல் உம்மை நான் கைப்பற்றுவேன். உம் உடலையும் ஆன்மாவையும் என் பக்கம் உயர்த்துவேன். உம்மை நிராகரித்தவர்களின் அழுக்குகளிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துவேன். அவர்களை விட்டும் உம்மை தூரமாக்குவேன். முஹம்மதின்மீது நம்பிக்கை கொள்வது உட்பட சத்திய மார்க்கத்தில் உம்மைப் பின்பற்றியவர்களை உம்மை நிராகரித்தவர்களைவிட ஆதாரத்தைக் கொண்டும் கண்ணியத்தைக் கொண்டும் மறுமை நாள்வரை மேலோங்கச் செய்வேன். பின்பு மறுமையில் நீங்கள் என்னிடத்தில்தான் வரவேண்டும். அப்போது நீங்கள் கருத்துவேறுபாடுகொண்ட விஷயங்களில் உங்களிடையே சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்.