பாடம் 9 / 11
முஸ்லிம்கள் கஅபாவை வணங்குகிறார்களா?
சுருக்கமான பதில்
இல்லை. குர்ஆன் கூறுவது போல், "இவ்வீட்டின் இறைவனாகிய" அல்லாஹ்வை மட்டுமே முஸ்லிம்கள் வணங்குகிறார்கள். மக்காவிலுள்ள கஅபா அவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஓர் இல்லம். இப்ராஹீம் நபியும் அவருடைய மகன் இஸ்மாயீலும் அதன் அடித்தளங்களை உயர்த்தினார்கள். எல்லா முஸ்லிம்களும் தொழுகையில் முன்னோக்கும் திசையாக (கிப்லா) அல்லாஹ் அதை ஆக்கினான். இதனால் எங்குமுள்ள நம்பிக்கையாளர்கள் ஒன்றாகத் தொழுகிறார்கள். உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் (கருப்புக் கல்) கல்லை முத்தமிட்டபோது, அது தீங்கோ நன்மையோ செய்ய முடியாத ஒரு கல் மட்டுமே என்று தமக்குத் தெரியும் என்றும், நபி ﷺ அவர்கள் அதை முத்தமிடுவதைப் பார்த்ததால் மட்டுமே தாம் அதை முத்தமிடுவதாகவும் கூறினார்கள்.
கபஸ் எழுதியது, அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் கரீம், தஃப்ஸீர் இப்னு கஸீர், HadeethEnc.com விளக்கங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது.
குர்ஆனிலிருந்து
فَلۡيَعۡبُدُواْ رَبَّ هَٰذَا ٱلۡبَيۡتِ ﴿٣﴾ ٱلَّذِيٓ أَطۡعَمَهُم مِّن جُوعٖ وَءَامَنَهُم مِّنۡ خَوۡفِۭ ﴿٤﴾
3. (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும். 4. அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகிறான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்.
வசனங்களின் விளக்கம்
3. ஆகவே அவர்கள் இந்த இல்லத்தின் இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்கட்டும். அவன்தான் அவர்களுக்கு இந்தப் பயணத்தை இலகுபடுத்திக் கொடுத்தான். அவனுக்கு இணையாக அவர்கள் யாரையும் ஆக்க வேண்டாம்.
4. அவன்தான் பசியிலிருந்தும் அரபுக்கள் உள்ளங்களில் ஹரமைக் குறித்தும் அங்கு வசிப்பவர்களைக் குறித்தும் கண்ணியத்தை ஏற்படுத்தி அவர்களுக்குப் பயத்திலிருந்தும் விடுதலையளித்தான்.
وَإِذۡ يَرۡفَعُ إِبۡرَٰهِـۧمُ ٱلۡقَوَاعِدَ مِنَ ٱلۡبَيۡتِ وَإِسۡمَٰعِيلُ رَبَّنَا تَقَبَّلۡ مِنَّآۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿١٢٧﴾
127. இப்றாஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது ‘‘எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்கள் பிரார்த்தனையை) நன்கு செவியுறுபவன், நன்கு அறிந்தவன்.
வசனங்களின் விளக்கம்
127. தூதரே! இப்ராஹீமும் இஸ்மாயீலும் கஅபாவின் அத்திவாரங்களை எழுப்பிக் கொண்டிருந்ததை நினைவுகூர்வீராக. அவர்கள் மிகுந்த பணிவோடு, எங்கள் இறைவனே, எங்களிடமிருந்து இந்த கஃபாவை நிர்மாணித்தல் உட்பட எங்கள் செயல்களை ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக நீ எமது பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவனாகவும், எங்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய் என்று பிரார்த்தனை செய்தார்கள்.
قَدۡ نَرَىٰ تَقَلُّبَ وَجۡهِكَ فِي ٱلسَّمَآءِۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبۡلَةٗ تَرۡضَىٰهَاۚ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥۗ وَإِنَّ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَيَعۡلَمُونَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا يَعۡمَلُونَ ﴿١٤٤﴾
144. (நபியே!) உமது முகம் (பிரார்த்தனை செய்து) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகிறோம். எனவே, நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் எங்கிருந்த போதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். வேதம் கொடுக்கப்பட்ட (யூதர்களும், கிறிஸ்தவர்களும் (நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய) ‘‘இது தங்கள் இறைவனிடமிருந்(து வந்)த உண்மை(யான உத்தரவு)தான்'' என நிச்சயமாக அறிவார்கள். (ஏனென்றால், அவ்வான்ற அவர்களுடைய வேதத்தில் இருக்கிறது. எனவே, உண்மையை மறைக்கும்) அவர்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.
வசனங்களின் விளக்கம்
144. தூதரே! நீர் விரும்பும் திசைக்கு கிப்லா மாற்றப்படும் வஹி இறங்குவதை எதிர்பார்த்தவராக உமது முகமும், பார்வையும் வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே நீர் இப்போது முன்னோக்கும் பைதுல் மக்திஸ் கிப்லாவிற்குப் பதிலாக நீர் விரும்பும் கிப்லாவான கஅபாவின் பக்கம் உம்மைத் திருப்பியே தீருவோம். எனவே உமது முகத்தை மக்காவில் அமைந்துள்ள கஅபாவின் பக்கம் திருப்புவீராக. நம்பிக்கையாளர்களே, நீங்கள் எங்கிருந்தாலும் தொழும்போது அதன் திசையை முன்னோக்கிக் கொள்ளுங்கள். வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் கிருஸ்தவர்களும் கிப்லா மாற்றம் அவர்களைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட உண்மையே என்பதை அவர்களின் வேதத்தின் மூலம் நன்கறிவார்கள். சத்தியத்தைப் புறக்கணிக்கும் இவர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. அவன் அவற்றை நன்கறிவான். அதற்கு அவர்களுக்கு கூலியும் வழங்குவான்.
وَلِلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ فَأَيۡنَمَا تُوَلُّواْ فَثَمَّ وَجۡهُ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ وَٰسِعٌ عَلِيمٞ ﴿١١٥﴾
115. கிழக்கு திசையும் மேற்கு திசையும் அல்லாஹ்வுக்கே (உரியன). ஆதலால், நீங்கள் எத்திசையை நோக்கினும் அங்கு அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக அறிந்தவன்.
வசனங்களின் விளக்கம்
115. கிழக்கு, மேற்கு மற்றும் அவையிரண்டிற்கு இடைப்பட்டவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் தான் நாடியவற்றைக் கொண்டு அடியார்களை ஏவுகிறான். நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வையே நோக்குகிறீர்கள். அவன் உங்களை பைத்துல் முகத்தஸை நோக்கும்படியோ கஅபாவை நோக்கும்படியோ ஏவினால், அல்லது நீங்கள் முன்னோக்கும் திசையில் தவறிறைத்தால் அல்லது அதனை முன்னோக்குவது உங்களுக்குக் கடினமாக இருந்தால் அதனால் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. ஏனெனில் திசைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். தன் அருளாலும் இலகுபடுத்தலாலும் படைப்புகளுடன் விசாலத்தன்மையுடன் நடப்பவன். அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவன் நன்கறிந்தவன்.
சுன்னாவிலிருந்து
உமர் (ரலி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, அவர்கள் ஒரு தடவை ஹஜருல் அஸ்வதிடம் வந்து, அதனை முத்தமிட்டுவிட்டு இவ்வாறு கூறினார்கள் : நீ, பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற ஒரு கல் மாத்திரமே என்பதை நான் அறிவேன். நபியவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிருக்காவிட்டால், நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்.
விளக்கம்
உமர் (ரலி) அவர்கள் ஒரு தடவை, கஃபாவின் மூலையில் இருக்கும் ஹஜருல் அஸ்வதிடம் வந்து, அதனை முத்தமிட்டுவிட்டு 'நீ, பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற ஒரு கல் மாத்திரமே என்பதை நான் அறிவேன். நபியவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிருக்காவிட்டால், நான் முத்தமிட்டிருக்கமாட்டேன்.' என்று கூறினார்கள்.