பாடம் 8 / 11
அப்பாவி மக்களைக் கொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறதா?
சுருக்கமான பதில்
இல்லை. அப்பாவியான எந்த உயிரையும் பறிப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. அநியாயமாக ஓர் ஆத்மாவைக் கொலை செய்பவர் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவர் போலாவார், ஓர் ஆத்மாவை வாழ வைப்பவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார் என்று அல்லாஹ் விதித்ததாகக் குர்ஆன் கூறுகிறது. போரில் முஸ்லிம்கள் எதிரிப் போராளிகளுடன் மட்டுமே போரிடலாம். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் போரிடாத மற்றவர்களை ஒருபோதும் கொல்லக் கூடாது. முஸ்லிம்களால் பாதுகாப்பு வாக்குறுதி அளிக்கப்பட்ட முஸ்லிம் அல்லாத ஒருவரைக் கொல்பவர் சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகர மாட்டார் என்று நபி ﷺ அவர்கள் எச்சரித்தார்கள்.
கபஸ் எழுதியது, அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் கரீம், தஃப்ஸீர் இப்னு கஸீர், HadeethEnc.com விளக்கங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது.
குர்ஆனிலிருந்து
مِنۡ أَجۡلِ ذَٰلِكَ كَتَبۡنَا عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفۡسَۢا بِغَيۡرِ نَفۡسٍ أَوۡ فَسَادٖ فِي ٱلۡأَرۡضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعٗا وَمَنۡ أَحۡيَاهَا فَكَأَنَّمَآ أَحۡيَا ٱلنَّاسَ جَمِيعٗاۚ وَلَقَدۡ جَآءَتۡهُمۡ رُسُلُنَا بِٱلۡبَيِّنَٰتِ ثُمَّ إِنَّ كَثِيرٗا مِّنۡهُم بَعۡدَ ذَٰلِكَ فِي ٱلۡأَرۡضِ لَمُسۡرِفُونَ ﴿٣٢﴾
32. இதன் காரணமாகவே ‘‘எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே தவிர (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்'' என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம். மேலும், அவர்களிடம் நமது பல தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள். இதற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் வரம்பு கடந்தே வந்தனர்.
வசனங்களின் விளக்கம்
32. காபீல் தன் சகோதரனைக் கொலை செய்ததனால் இஸ்ராயீலின் மக்களுக்கு அறிவித்தோம்: “பழிவாங்குதல் அல்லது நிராகரிப்போ வழிப்பறிக்கொள்ளை மூலமோ பூமியில் குழப்பம் விளைவித்தல் ஆகிய காரணத்திற்காக அன்றி ஒரு மனிதனைக் கொலை செய்பவர் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவரைப் போன்றவராவார். ஏனெனில் அவன் அப்பாவிக்கும் குற்றவாளிக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காணவில்லை. யார் அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதற்காக ஒரு உயிரைக் கொலைசெய்யாமல் தவிர்ந்துகொண்டாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போலாவார். ஏனெனில் அவரது செயலால் அனைவருக்கும் அமைதி கிடைக்கிறது. எமது தூதர்கள் இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான ஆதாரங்களையும் அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். இருந்தும் அவர்களில் பெரும்பாலானோர் பாவங்கள் புரிந்து தங்கள் தூதர்களுக்கு மாறுசெய்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்களாகவே இருந்தார்கள்.
وَقَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يُقَٰتِلُونَكُمۡ وَلَا تَعۡتَدُوٓاْۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ ﴿١٩٠﴾
190. உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் அத்துமீறாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.
வசனங்களின் விளக்கம்
190. அல்லாஹ்வின் பாதையை விட்டும் உங்களைத் தடுப்பதற்காக உங்களுடன் போரிடும் நிராகரிப்பாளர்களுடன் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காக போரிடுங்கள். போர்க்களத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றோரைக் கொன்றோ இறந்தவர்களைச் சித்திரவதை செய்தோ வரம்புமீறிவிடாதீர்கள். அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை மீறக்கூடியவர்களை அவன் ஒருபோதும் நேசிப்பதில்லை.
சுன்னாவிலிருந்து
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள்: '(இஸ்லாமிய அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டான். அந்த நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைதூரமளவிற்கு வீசிக் கொண்டிருக்கும்'.
விளக்கம்
பாதுகபாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில்; இஸ்லாமிய அரசின் கீழ் வாழும்; முஸ்லிமல்லாத பிரஜை ஒருவரை தகுந்த காரணமின்றிக் கொன்றவன் சுவர்க்கத்தின் வாடையை நுகர மாட்டடான் என்ற கடுமையான எச்சரிக்கையை இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துவதுடன் அதன் நறுமணமானது நாற்பதாண்டுப் பயணத் தொலைவுவரை வீசிக் கொண்டிருக்கும என்றும் குறிப்பிடுகிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.
விளக்கம்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெண்களையும்,பருவ வயதை அடையாத குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.