ஸூரா An-Nisa, வசனம் 129

4:129

وَلَن تَسۡتَطِيعُوٓاْ أَن تَعۡدِلُواْ بَيۡنَ ٱلنِّسَآءِ وَلَوۡ حَرَصۡتُمۡۖ فَلَا تَمِيلُواْ كُلَّ ٱلۡمَيۡلِ فَتَذَرُوهَا كَٱلۡمُعَلَّقَةِۚ وَإِن تُصۡلِحُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا ١٢٩

129. (நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவிகளிருந்து) நீங்கள் (உங்கள்) மனைவிகளுக்கிடையில் அன்புகாட்டுவதில் நீதமாக நடக்க வேண்டுமென்று விரும்பியபோதிலும் (அது) உங்களால் சாத்தியப்படாது. என்றாலும், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை (அந்தரத்தில்) தொங்கியவளாக விட்டுவிடாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (உங்களுக்கிடையில்) சமாதானமாக நடந்து கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) குற்றங்களை மன்னித்துக் கருணை புரிபவனாக இருக்கிறான்.

தஃப்ஸீர்

4.129. கணவர்களே! நீங்கள் என்னதான் விரும்பினாலும் உள்ளத்தில் ஏற்படும் அன்பில் உங்கள் மனைவியரிடையே உங்களால் முழுமையாக நீதிசெலுத்த முடியாது. சில சமயங்களில் அது உங்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் நீங்கள் நேசிக்காத பெண்ணை முழுமையாகப் புறக்கணித்து- கணவனின் உரிமையைப் பெறாதவளாகவும் வேறு திருமணமும் செய்ய முடியாதவளாகவும் - விட்டுவிடாதீர்கள். உங்கள் மனம் விரும்பாத மனைவியரின் உரிமையை அளிப்பதற்கு உங்களை நீங்கள் தயார்படுத்தி உங்களிடையே சமாதானம் செய்துகொண்டு, அந்த மனைவியின் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சினால் - நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் உங்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.