ஸூரா An-Nisa, வசனம் 128

4:128

وَإِنِ ٱمۡرَأَةٌ خَافَتۡ مِنۢ بَعۡلِهَا نُشُوزًا أَوۡ إِعۡرَاضٗا فَلَا جُنَاحَ عَلَيۡهِمَآ أَن يُصۡلِحَا بَيۡنَهُمَا صُلۡحٗاۚ وَٱلصُّلۡحُ خَيۡرٞۗ وَأُحۡضِرَتِ ٱلۡأَنفُسُ ٱلشُّحَّۚ وَإِن تُحۡسِنُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا ١٢٨

128. எந்த ஒரு பெண்ணாவது தன் கணவன் (தனக்கு) கடுமையாக இடையூறளிப்பான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்களிருவரும் (சம்மதித்து) தங்களுக்குள் ஒரு சமாதான முடிவை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. (எவ்விதத்திலும் இருவரும் சம்மதித்த) சமாதானமே மிக மேலானது. (இத்தகைய சந்தர்ப்பங்களில் ஏதும் பொருள் கொடுக்கும்படி நேரிட்டால் பொதுவாக) ஒவ்வொரு ஆத்மாவும் கஞ்சத்தனத்திற்கு உட்பட்டு விடுகிறது. ஆகவே, நீங்கள் (கஞ்சத்தனத்திற்கு உட்படாமல்) ஒவ்வொருவரும் மற்றவருக்கு நன்மை செய்பவராக இருந்து அல்லாஹ்வுக்கும் பயந்து நடந்து கொண்டால் (அது மிக நல்லது.) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

தஃப்ஸீர்

4.128. ஒரு பெண் தன் கணவன் தன்மீது விருப்பமின்றி தன்னைப் புறக்கணித்துவிடுவான் என்று அஞ்சினால் - செலவுசெய்தல், இரவுதங்குதல் போன்ற - கடமையாக்கப்பட்ட தனது சில உரிமைகளை மனைவி விட்டுக்கொடுத்து இருவரும் சமாதானம் செய்துகொள்வதில் இருவர்மீதும் எந்தக்குற்றமும் இல்லை. விவாகரத்து செய்வதைவிட சமாதானம் செய்வதே சிறந்ததாகும். உள்ளங்கள் பேராசை, கஞ்சத்தனம் கொண்டதாகவே படைக்கப்பட்டுள்ளன. எனவேதான் அந்த உள்ளம் தன் உரிமைகளை விட்டுக்கொடுக்க விரும்பாது. கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், நன்மை செய்தல் ஆகிய பண்புகளுக்கு தங்களின் மனதைப் பண்படுத்தி இத்தீயகுணத்தை மாற்றிகொள்ள வேண்டும். உங்களின் எல்லா விவகாரங்களிலும் நீங்கள் நல்லமுறையில் நடந்துகொண்டால், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சினால் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.