يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ شَهَٰدَةُ بَيۡنِكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ حِينَ ٱلۡوَصِيَّةِ ٱثۡنَانِ ذَوَا عَدۡلٖ مِّنكُمۡ أَوۡ ءَاخَرَانِ مِنۡ غَيۡرِكُمۡ إِنۡ أَنتُمۡ ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَأَصَٰبَتۡكُم مُّصِيبَةُ ٱلۡمَوۡتِۚ تَحۡبِسُونَهُمَا مِنۢ بَعۡدِ ٱلصَّلَوٰةِ فَيُقۡسِمَانِ بِٱللَّهِ إِنِ ٱرۡتَبۡتُمۡ لَا نَشۡتَرِي بِهِۦ ثَمَنٗا وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰ وَلَا نَكۡتُمُ شَهَٰدَةَ ٱللَّهِ إِنَّآ إِذٗا لَّمِنَ ٱلۡأٓثِمِينَ ١٠٦
106. நம்பிக்கையாளர்களே! உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து (அவர் மரண சாசனம் கூற விரும்பினால்) அவர் மரண சாசனம் (வஸீயத்) கூறும் சமயத்தில் உங்களில் நம்பிக்கைக்குரிய (நேர்மையான) இருவர் சாட்சியாக இருக்கவேண்டும். அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்துகொண்டு இருக்கும்பொழுது மரணம் சமீபித்தால் (அது சமயம் சாசனத்தின் சாட்சிக்காக முஸ்லிம்களாகிய இருவர் கிடைக்காவிடில்) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கவும். (இந்தச் சாட்சிகள் கூறும் விஷயத்தில்) உங்களுக்குச் சந்தேகமேற்பட்டால் அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப்பின் தடுத்து வைத்துக்கொள்ளவும். அவ்விருவரும் ‘‘நாங்கள் கூறிய (சாட்சியத்)தைக் கொண்டு ஒரு பொருளையும் அதற்காக நாங்கள் அடையவிரும்பவில்லை. அவர்கள் எங்கள் உறவினர்களாக இருந்தபோதிலும் நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்கவே இல்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
தஃப்ஸீர்
5.106. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு மரணத்திற்கான அறிகுறிகள் தென்பட்டுவிட்டால் உயில் எழுதும்போது முஸ்லிம்களில் நீதியுடன் சாட்சிசொல்லக்கூடிய இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பயணத்தில் இருந்து மரணம் சமீபித்து இரு முஸ்லிமான சாட்சிகள் கிடைக்காவிட்டால் நிராகரிப்பாளர்களிலிருந்து இரு ஆண்களைச் சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்விருவரின் சாட்சியங்களில் சந்தேகம் ஏற்பட்டால் ஒரு தொழுகைக்குப் பின் அவர்களை அமரவைத்து “தங்களின் சாட்சியத்தை எதற்குப் பதிலாகவும் நாங்கள் விற்றுவிட மாட்டோம், எந்த உறவினருக்குச் சார்பாகவும் நடக்கமாட்டோம் தம்மிடமுள்ள அல்லாஹ்வுக்குரிய எந்தவொரு சாட்சியத்தையும் நாங்கள் மறைத்துவிட மாட்டோம், அவ்வாறு செயல்பட்டால் நாம் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்ட பாவிகள்” என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து வாக்குறுதி பெற்றுக் கொள்ளுங்கள்.