ஸூரா An-Nisa, வசனம் 83

4:83

وَإِذَا جَآءَهُمۡ أَمۡرٞ مِّنَ ٱلۡأَمۡنِ أَوِ ٱلۡخَوۡفِ أَذَاعُواْ بِهِۦۖ وَلَوۡ رَدُّوهُ إِلَى ٱلرَّسُولِ وَإِلَىٰٓ أُوْلِي ٱلۡأَمۡرِ مِنۡهُمۡ لَعَلِمَهُ ٱلَّذِينَ يَسۡتَنۢبِطُونَهُۥ مِنۡهُمۡۗ وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَٱتَّبَعۡتُمُ ٱلشَّيۡطَٰنَ إِلَّا قَلِيلٗا ٨٣

83. பயத்தையோ (பொது மக்களின்) பாதுகாப்பையோ பற்றிய ஒரு செய்தி அவர்களுக்கு எட்டினால் (உடனே) அதை (வெளியில்) கூற ஆரம்பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், தங்கள் அதிகாரிகளிடமும் (மட்டும்) தெரிவித்தால் அவர்களில் ஊகிக்கக்கூடிய (ஆராயக்கூடிய அ)வர்கள் உண்மையை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்வார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் உங்கள்மீது இல்லையென்றால் (உங்களில்) சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.

தஃப்ஸீர்

4.83. முஸ்லிம்களின் அமைதி, மகிழ்ச்சி அல்லது அச்சம், கவலை சம்பந்தமான ஏதாவது ஒரு செய்தி இந்த நயவஞ்சகர்களிடம் வந்தால் அதனைப் பரப்பிவிடுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் அல்லது முஸ்லிம்களின் விவகாரங்களை நிர்ணயிக்கும் பொறுப்புதாரர்கள், அறிவுடையவர்கள், விசுவாசமானவர்களிடம் விஷயத்தை கொண்டு சென்றிருந்தால் ஆராய்ந்தறிவோர் அச்செய்தியை இரகசியமாக வைப்பதா வெளியிடுவதா என்பதை முடிவுசெய்திருப்பார்கள். இறைநம்பிக்கையாளர்களே! இஸ்லாத்தின் மூலம் அல்லாஹ்வின் அருளும் அல்குர்ஆனின் மூலம் அவனது கருணையும் உங்களுக்குக் கிடைத்து இந்த நயவஞ்சகர்களை சோதித்ததை விட்டும் அவன் உங்களைப் பாதுகாத்திருக்காவிட்டால் உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானின் ஊசலாட்டங்களைப் பின்பற்றியிருப்பீர்கள்.