يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَا تَغۡلُواْ فِي دِينِكُمۡ وَلَا تَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّۚ إِنَّمَا ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ رَسُولُ ٱللَّهِ وَكَلِمَتُهُۥٓ أَلۡقَىٰهَآ إِلَىٰ مَرۡيَمَ وَرُوحٞ مِّنۡهُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۖ وَلَا تَقُولُواْ ثَلَٰثَةٌۚ ٱنتَهُواْ خَيۡرٗا لَّكُمۡۚ إِنَّمَا ٱللَّهُ إِلَٰهٞ وَٰحِدٞۖ سُبۡحَٰنَهُۥٓ أَن يَكُونَ لَهُۥ وَلَدٞۘ لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا ١٧١
171. வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து சென்றுவிடாதீர்கள். மேலும், அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதர்தான். (அவனுடைய மகனல்ல.) அவனுடைய (‘குன்' என்ற) வாக்கா(ல் பிறந்தவரா)கவும் இருக்கிறார். அல்லாஹ் (தன்) வாக்கை மர்யமுக்கு அளித்தான். (மற்ற ஆத்மாக்களைப் போன்று அவரும்) அவனால் படைக்கப்பட்ட ஓர் ஆத்மாவே. ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்கள்) ‘மூவர்' என்றும் கூறாதீர்கள். (இவ்வாறு கூறுவதை) விட்டுவிடுங்கள். (அது) உங்களுக்குத்தான் மிக நன்று. ஏனென்றால், அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன். அவன் சந்ததிகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன். வானங்கள், பூமியில் இருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! (உங்கள் அனைவரையும்) பாதுகாக்க அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (ஈஸா அவசியமில்லை.)
தஃப்ஸீர்
4.171. தூதரே! இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிருஸ்தவர்களிடம் கூறுவீராக: “உங்களின் மார்க்கத்தில் வரம்புமீறி விடாதீர்கள். ஈசாவைக் குறித்து உண்மையைத் தவிர எதனையும் அல்லாஹ்வின் மீது கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈசா மஸீஹ் உண்மையைக் கொண்டு அல்லாஹ் அனுப்பிய தூதரே. ஜிப்ரீல் மூலம் மர்யமிடம் அனுப்பிய தன் வார்த்தையால் அவரைப் படைத்தான். குன் - ஆகிவிடு என்பதுதான் அந்த வார்த்தை. அவர் ஆகிவிட்டார். அல்லாஹ்வின் கட்டளையினால் ஜீப்ரீல் மர்யமிடம் அதை ஊதினார். எனவே அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்கள் அனைவரின்மீதும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்ளுங்கள். ‘கடவுள்கள் மூவர்’ என்று கூறாதீர்கள். பொய்யான இந்த விஷயத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மை பயக்கும். இறைவன் ஒருவனே. அவனுக்கு மனைவியோ மகனோ யாரும் இல்லை. அவன் தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் அவை இரண்டிற்கு இடையிலுள்ளவையும் அவனுக்கே உரியன. வானங்கள் பூமி ஆகியவற்றில் உள்ளவற்றைக் கவனிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் அல்லாஹ்வே போதுமானவனாவான்.