يُوصِيكُمُ ٱللَّهُ فِيٓ أَوۡلَٰدِكُمۡۖ لِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِۚ فَإِن كُنَّ نِسَآءٗ فَوۡقَ ٱثۡنَتَيۡنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَۖ وَإِن كَانَتۡ وَٰحِدَةٗ فَلَهَا ٱلنِّصۡفُۚ وَلِأَبَوَيۡهِ لِكُلِّ وَٰحِدٖ مِّنۡهُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُۥ وَلَدٞۚ فَإِن لَّمۡ يَكُن لَّهُۥ وَلَدٞ وَوَرِثَهُۥٓ أَبَوَاهُ فَلِأُمِّهِ ٱلثُّلُثُۚ فَإِن كَانَ لَهُۥٓ إِخۡوَةٞ فَلِأُمِّهِ ٱلسُّدُسُۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصِي بِهَآ أَوۡ دَيۡنٍۗ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ لَا تَدۡرُونَ أَيُّهُمۡ أَقۡرَبُ لَكُمۡ نَفۡعٗاۚ فَرِيضَةٗ مِّنَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا ١١
11. உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஓர் ஆணுக்கு இரு பெண்க ளுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆண் இன்றி) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே ஒரு பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற பொருளில்) பாதி உண்டு. (உங்களில்) இறந்தவருக்கு சந்ததியுமிருந்து (தாய் தந்தையும் இருந்தால்) தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற (சொத்)தில் ஆறில் ஒரு பாகமுண்டு. இறந்தவருக்கு வாரிசு இல்லாமலிருந்து தாய், தந்தைகளே, வாரிசுக்காரர்களானால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்தான். (மற்ற இரு பாகமும் தந்தையைச் சாரும். இத்தகைய நிலைமையில் இறந்தவருக்கு பல) சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒன்றுதான் (மீதமுள்ளது தந்தையைச் சாரும். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. இவை அனைத்தும் வஸீயத் எனும்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (மீதமுள்ள சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும்). உங்கள் தந்தைகளோ அல்லது உங்கள் சந்ததிகளோ (இவர்களில்) உங்களுக்குப் பலனளிப்பதில் நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (ஆகவே, இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான். (ஆகையால் அவன் விதித்தபடி பங்கிட்டுக் கொள்ளுங்கள்.)
தஃப்ஸீர்
4.11. உங்கள் பிள்ளைகளின் அநந்தர விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்: அவர்களிடையே சொத்து பங்கிடப்படும்போது மகனுக்கு இரண்டு மகள்களின் பங்குகள் தரப்பட வேண்டும். இறந்தவருக்கு ஆண்பிள்ளைகள் அல்லாமல் இரண்டிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் மட்டும் இருந்தால் அவர் விட்டுச்சென்ற சொத்தில் மூன்றில் இரண்டுபங்கு அவர்களுக்குத் தரப்பட வேண்டும். அவருக்கு ஒரு பெண்பிள்ளை மட்டும் இருந்தால் அவர் விட்டுச்சென்றவற்றில் பாதி அவளுக்குத் தரப்பட வேண்டும். இறந்தவருக்கு ஆண்பிள்ளையோ பெண்பிள்ளையோ இருந்தால் தாய், தந்தையர் இருவருக்கும் தனித்தனியாக ஆறில் ஒருபங்கு தரப்பட வேண்டும். இறந்தவருக்குக் குழந்தைகள் இல்லாமல் தாய், தந்தையர் மட்டுமே வாரிசுகளாக இருந்தால் அவரது தாய்க்கு மூன்றில் ஒருபங்கும் மீதமுள்ளதை தந்தைக்கும் அளித்துவிட வேண்டும். இறந்தவருக்கு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சகோதரர்களோ சகோதரிகளோ இருந்தால் தாய்க்கு ஆறில் ஒருபங்கை அளித்துவிட்டு மீதமுள்ளதை தந்தைக்கு அளித்துவிட வேண்டும். சகோதரர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்தப் பங்கீடு இறந்தவர் செய்த மரண சாசனத்தையும் அவரது கடனையும் நிறைவேற்றிய பிறகுதான் இருக்க வேண்டும். அவர் செய்த மரண சாசனம் அவர் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் ஒரு பங்கைத் தாண்டிவிடக்கூடாது. அல்லாஹ் உங்களுக்குப் பங்கீட்டை இவ்வாறு அமைத்துள்ளான். உங்களின் பிள்ளைகள், தந்தையர் ஆகியோரில் யார் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அதிகப் பயன்களை அளிக்கக்கூடியவர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். நீங்கள் உங்கள் வாரிசுகளில் சிலரின்மீது நல்லெண்ணம் வைத்து சொத்துகள் அனைத்தையும் அவருக்கு எழுதிவிடலாம். சிலர்மீது தவறான எண்ணத்தால் அவர்களுக்கு எதுவும் தராமல் போகலாம். ஆனால் நிலமை தலைகீழாக இருக்கலாம். இவை அனைத்தையும் சரியாக அறிந்தவன் அல்லாஹ்வே. எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. எனவே தான் மேற்சொன்னவாறு அநந்தரத்தைப் பங்குவைத்துள்ளான். இவ்வாறு செய்வதை அவன் தன் அடியார்கள்மீது கடமையாக்கியுள்ளான். அவன் அனைத்தையும் அறிந்தவன். அடியார்களுக்கு நன்மைதரக்கூடிய எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. தான் வழங்கும் சட்டங்களில், நிர்வகிப்பதில் அவன் ஞானம்மிக்கவன்.