يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلشَّهۡرِ ٱلۡحَرَامِ قِتَالٖ فِيهِۖ قُلۡ قِتَالٞ فِيهِ كَبِيرٞۚ وَصَدٌّ عَن سَبِيلِ ٱللَّهِ وَكُفۡرُۢ بِهِۦ وَٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَإِخۡرَاجُ أَهۡلِهِۦ مِنۡهُ أَكۡبَرُ عِندَ ٱللَّهِۚ وَٱلۡفِتۡنَةُ أَكۡبَرُ مِنَ ٱلۡقَتۡلِۗ وَلَا يَزَالُونَ يُقَٰتِلُونَكُمۡ حَتَّىٰ يَرُدُّوكُمۡ عَن دِينِكُمۡ إِنِ ٱسۡتَطَٰعُواْۚ وَمَن يَرۡتَدِدۡ مِنكُمۡ عَن دِينِهِۦ فَيَمُتۡ وَهُوَ كَافِرٞ فَأُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ٢١٧
217. (நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்பவர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அவற்றில் போர் புரிவது பெரும் பாவம்(தான்). ஆனால், அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை விட்டு மக்களை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை நீங்கள் நிராகரிப்பதும், (ஹஜ்ஜூக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ரில் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (அதைவிட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர, (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையைவிட மிகக் கொடியது. மேலும், (நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்குச் சாத்தியப்பட்டால் உங்களை உங்கள் மார்க்கத்திலிருந்து திருப்பி விடும்வரை உங்களை எதிர்த்து ஓயாது போர் செய்து கொண்டே இருப்பார்கள். ஆகவே, உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தை (நிராகரித்து)விட்டு மாறி, (அதை அவ்வாறு) நிராகரித்(ததைப் பற்றி வருத்தப்பட்டு மீளா)தவராகவே இறந்துவிட்டால் அவருடைய (நற்)செயல்கள் எல்லாம் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். இன்னும், அவர்கள் நரகவாசிகளாகி, என்றென்றுமே அதில் தங்கி விடுவார்கள்.
தஃப்ஸீர்
2.217. தூதரே! புனிதமான மாதங்களான துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களில் போர்புரிவதைப் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: இந்த மாதங்களில் போர்புரிவது அல்லாஹ்விடத்தில் பாவமானதும் கண்டனத்திற்குரியதுமாகும். அதே போன்று அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கும் இணைவைப்பாளர்களின் செயலும் கெட்டதாகும். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு நம்பிக்கையாளர்களைத் தடுப்பது, அங்கு வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது அல்லாஹ்விடத்தில் புனித மாதத்தில் போரிடுவதை விடப் பெரிய பாவமாகும். அல்லாஹ்விற்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் அவர்களின் செயற்பாடு கொலையைவிடக் கொடியது. நம்பிக்கையாளர்களே! வாய்ப்புக் கிடைத்தால் உங்களை உண்மையான மார்க்கத்திலிருந்து திருப்பி தமதுபொய்யான மார்க்கத்திற்கு கொண்டுவரும்வரை, அநீதியில் இருக்கும் இந்த இணைவைப்பாளர்கள் உங்களுடன் ஓயாமல் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர் தம் மார்க்கத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வை நிராகரித்த நிலையில் மரணித்தும் விடுகிறாரோ அவரது நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும். மறுமையில் அவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்.