فَإِذَا قَضَيۡتُم مَّنَٰسِكَكُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَذِكۡرِكُمۡ ءَابَآءَكُمۡ أَوۡ أَشَدَّ ذِكۡرٗاۗ فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا وَمَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖ ٢٠٠
200. (ஹஜ்ஜூக்குச் சென்ற) நீங்கள் உங்கள் (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றி விட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்த மிட்டு பெருமையாக) நினைவு கூர்ந்து கூறிவந்ததைப்போல் அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை ‘திக்ரு' (செய்து உங்களுக்கு வேண்டியவற்றையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையிலேயே கொடுத்து விடுவாயாக!'' என்று கோருபவரும் மனிதர்களில் உண்டு. ஆனால், இவருக்கு மறுமையில் ஒரு பாக்கியமும் இல்லை.
தஃப்ஸீர்
2.200. ஹஜ்ஜின் கிரியைகளை நீங்கள் பூர்த்தி செய்துவிட்டால் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். உங்கள் முன்னோர்களைக் கொண்டு நீங்கள் பெருமை பேசுவதுபோல அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வைப் புகழுங்கள். நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு அருட்கொடையும் அவன் அளித்ததுதான். மக்கள் பல்வேறு வகையினராக இருக்கின்றனர். அவர்களில் ஒரு வகையினர் இந்த உலகத்தின்மீது மட்டுமே நம்பிக்கைகொண்ட இணைவைக்கும் நிராகரிப்பாளர்கள். அவர்கள் ஆரோக்கியம், சொத்து, பிள்ளைப்பாக்கியம் ஆகிய இவ்வுலகின் இன்பங்களையும் அலங்காரத்தையுமே தங்கள் இறைவனிடம் கேட்கிறார்கள். அவர்கள் மறுமைநாளைப் புறக்கணித்து இவ்வுலகின்மீது மோகம் கொண்டதனால் மறுமையில் தன்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்காக அல்லாஹ் தயார்படுத்தியவற்றில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.