ஸூரா Al-Baqarah, வசனம் 143

2:143

وَكَذَٰلِكَ جَعَلۡنَٰكُمۡ أُمَّةٗ وَسَطٗا لِّتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيۡكُمۡ شَهِيدٗاۗ وَمَا جَعَلۡنَا ٱلۡقِبۡلَةَ ٱلَّتِي كُنتَ عَلَيۡهَآ إِلَّا لِنَعۡلَمَ مَن يَتَّبِعُ ٱلرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيۡهِۚ وَإِن كَانَتۡ لَكَبِيرَةً إِلَّا عَلَى ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِيعَ إِيمَٰنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٞ ١٤٣

143. (நம்பிக்கையாளர்களே!) அவ்வாறே (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான வகுப்பினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சிகளாக இருங்கள். (நம்) தூதர் உங்களுக்கு (வழி காட்டக் கூடிய) சாட்சியாக இருப்பார். (நபியே!) நீர் (இதுவரை முன்னோக்கித் தொழுதுகொண்டு) இருந்த (பைத்துல் முகத்தஸின்) திசையை (மாற்றாமல் நீர் அதையே நோக்கித் தொழுது வரும்படி இதுவரை) நாம் விட்டு வைத்திருந்ததெல்லாம் (அதை மாற்றிய பின் நம்) தூதரைப் பின்பற்றுபவர் யார்? பின்பற்றாமல் தன் குதிங்கால் புறமாகவே (புறமுதுகிட்டு) திரும்பி(ச் சென்று) விடுகிறவர் யார்? என்பதை நாம் அறி(வித்து விடு) வதற்காகத்தான். ஆனால், எவர்களை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகிறானோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அ(வ்வாறு கிப்லாவை மாற்றுவ)து நிச்சயமாக மிகப்பளுவாக இருக்கும். (நம்பிக்கையாளர்களே! இதற்கு முன்னர் நீங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த) உங்கள் நம்பிக்கையையும் அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக இரக்கமுள்ளவன், மிகக் கருணையாளன் ஆவான்.

தஃப்ஸீர்

2.143. உங்களுக்காக நாம் விரும்பிய முன்னோக்கு திசையை (கிப்லா) ஆக்கியது போலவே உங்களையும் சிறந்த, நீதியுள்ள சமூகமாக, கொள்கைகள், வணக்க வழிபாடுகள், பொதுவிவகாரங்கள் ஆகிய விஷயங்களில் நடுநிலையான சமூகமாக ஆக்கியுள்ளோம். இது, தமது சமூகங்களுக்கு எடுத்துரைக்குமாறு தனது தூதர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டதை அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள் என்று மறுமைநாளில் அவர்களுக்காக நீங்கள் சாட்சியாளர்களாய் திகழ வேண்டும் என்பதற்காகவும் முஹம்மது நபி அவருக்கு கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் என்று உங்கள்மீது அவர் சாட்சியாளராக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான். யார் அல்லாஹ் விதித்த கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவனுக்குக் கட்டுப்படுகிறார்கள் என்பதையும் யார் தம் மனஇச்சையைப் பின்பற்றி மார்க்கத்தை விட்டு திரும்பிச் செல்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்வதற்காகத்தான், நீர் முன்னோக்கியிருந்த கிப்லாவான பைதுல் முகத்தஸை நாம் மாற்றினோம். அல்லாஹ்வையும் அவன் தன் அடியார்களுக்கு விதித்த சட்டங்கள் யாவும் உயர்ந்த மதிநுட்பமிக்கவை என்பதையும் நம்பிக்கைக்கொள்வதற்கு அல்லாஹ் அருள்புரிந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு, முதல் கிப்லா மாற்றப்பட்ட சம்பவம் மிகவும் கடினமானதாக இருந்தது. அல்லாஹ்வின் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கையை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான். கிப்லா மாற்றப்படுவதற்கு முன்னால் நீங்கள் தொழுத தொழுகைகளும் அந்த நம்பிக்கையைச் சார்ந்ததே. நிச்சயமாக அவன் மக்களின் விஷயத்தில் மிகுந்த பரிவுடையவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான். அவன் அவர்களை கஷ்டத்தில் ஆழ்த்த மாட்டான்; அவர்கள் செய்த செயல்களின் கூலியை வீணாக்க மாட்டான்.