ஸூரா Al-A'raf, வசனம் 169

7:169

فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٞ وَرِثُواْ ٱلۡكِتَٰبَ يَأۡخُذُونَ عَرَضَ هَٰذَا ٱلۡأَدۡنَىٰ وَيَقُولُونَ سَيُغۡفَرُ لَنَا وَإِن يَأۡتِهِمۡ عَرَضٞ مِّثۡلُهُۥ يَأۡخُذُوهُۚ أَلَمۡ يُؤۡخَذۡ عَلَيۡهِم مِّيثَٰقُ ٱلۡكِتَٰبِ أَن لَّا يَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّ وَدَرَسُواْ مَا فِيهِۗ وَٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّلَّذِينَ يَتَّقُونَۚ أَفَلَا تَعۡقِلُونَ ١٦٩

169. அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தான்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் என(க் கூறி), இவ்வற்ப (உலகின்) பொருளைப் பெற்றுக்கொண்டு (அதற்கேற்றவாறு வேத வசனங்களைப் புரட்டுகின்றனர். மேலும், இக்குற்றத்தைப் பற்றி) ‘‘நாங்கள் மன்னிக்கப்படுவோம்'' என்றும் கூறுகின்றனர். (வேதத்தில் இவர்கள் புரட்டியதை தொடர்ந்து முன்பு போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப் பொருள்கள் பின்னரும் அவர்களிடம் வரும் சமயத்தில் அதையும் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறக்கூடாது என்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறையச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே! இவ்வளவு கூட) நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா?

தஃப்ஸீர்

7.169. இவர்களுக்குப் பின்னர் தீயவர்கள் இவர்களின் வாரிசுகளானார்கள். அவர்கள் தங்கள் முன்னோர்களிடமிருந்து தவ்ராத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் அதனைப் படித்தார்கள். ஆனால் அதன்படி செயல்படவில்லை. அல்லாஹ்வின் வேதத்தை திரிப்பதற்காகவும் அல்லாஹ் இறக்காததன்படி தீர்ப்பளிக்கவும், அற்ப ஆதாயத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறு செய்து விட்டு அல்லாஹ் தங்கள் பாவங்களை மன்னித்துவிடுவான் என்று ஆசைகொண்டார்கள். அவர்கள் உலகின் அற்ப ஆதாயம் கிடைக்கும் போது மீண்டும் மீண்டும் அதனைப் பெற்றுக் கொண்டார்கள். வேதத்தை திரிக்காமல், மாற்றாமல் அல்லாஹ்வின் மீது உண்மை கூற வேண்டும் என்று அல்லாஹ் இவர்களிடம் ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் பெறவில்லையா? அவர்கள் அறியாமையினால் வேத்ததின்படி செயல்படாமல் இருக்கவில்லை. மாறாக அறிந்துகொண்டே அவ்வாறு செய்தார்கள். வேதத்திலுள்ளதை அவர்கள் கற்றார்கள், அறிந்து கொண்டார்கள். எனவே அவர்களது பாவம் மிகக் கடுமையானது. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அழியக்கூடிய இவ்வுலக இன்பங்களைவிட நிலையான மறுமையும் அதன் நிரந்தர இன்பங்களுமே சிறந்தவையாகும். அற்ப ஆதாயத்தைப் பெற்றுக்கொள்ளும் இவர்கள், அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் தயார்படுத்தியுள்ளவை மிகச்சிறந்ததும் நிலையானதும் ஆகும் என்பதைச் சிந்திக்க மாட்டார்களா?