أَلَمۡ يَرَوۡاْ كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّن قَرۡنٖ مَّكَّنَّٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ مَا لَمۡ نُمَكِّن لَّكُمۡ وَأَرۡسَلۡنَا ٱلسَّمَآءَ عَلَيۡهِم مِّدۡرَارٗا وَجَعَلۡنَا ٱلۡأَنۡهَٰرَ تَجۡرِي مِن تَحۡتِهِمۡ فَأَهۡلَكۡنَٰهُم بِذُنُوبِهِمۡ وَأَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قَرۡنًا ءَاخَرِينَ ٦
6. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்கு நாம் செய்து தந்திருந்தோம். வானத்திலிருந்து தாரை தாரையாக மழை பெய்யும்படிச் செய்து, அவர்களின் (ஆதிக்கத்தின்) கீழ் நீரருவிகளும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்படி செய்தோம். (எனினும் அவர்கள் பாவத்திலேயே ஆழ்ந்து விட்டனர்.) ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை அழித்துவிட்டோம். அவர்களுக்குப் பின்னர் மற்றொரு கூட்டத்தாரை நாம் உற்பத்தி செய்தோம்.
தஃப்ஸீர்
6.6. இந்த நிராகரிப்பாளர்கள் அநியாயக்கார சமூகங்களை அழிப்பதில் அல்லாஹ்வின் வழிமுறையை அறிந்துகொள்ளவில்லையா என்ன? அவர்களுக்கு முன்னர் அவன் பூமியில் எத்தனையோ சமூகங்களை அவன் அழித்துள்ளான். இந்த நிராகரிப்பாளர்களுக்கு வழங்காத பூமியில் நிலைப்பதற்கான ஆற்றல்களை அவர்களுக்கு அவன் வழங்கியிருந்தான். அவர்கள்மீது தொடர் மழையைப் பொழியச் செய்தான். அவர்களின் வசிப்பிடங்களுக்குக் கீழே ஆறுகளை ஓடச் செய்தான். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தார்கள். அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவன் அவர்களை அழித்துவிட்டான். அவர்களுக்குப் பின் வேறு சமூகங்களை உருவாக்கினான்.