ஸூரா An-Nahl, வசனம் 112

16:112

وَضَرَبَ ٱللَّهُ مَثَلٗا قَرۡيَةٗ كَانَتۡ ءَامِنَةٗ مُّطۡمَئِنَّةٗ يَأۡتِيهَا رِزۡقُهَا رَغَدٗا مِّن كُلِّ مَكَانٖ فَكَفَرَتۡ بِأَنۡعُمِ ٱللَّهِ فَأَذَٰقَهَا ٱللَّهُ لِبَاسَ ٱلۡجُوعِ وَٱلۡخَوۡفِ بِمَا كَانُواْ يَصۡنَعُونَ ١١٢

112. ஓர் ஊராரை அல்லாஹ் (அவர்களுக்கு) உதாரணமாகக் கூறுகிறான். அவ்வூர் (மிக்க செழிப்பாகவும், அதிலிருந்தவர்கள்) திருப்தியோடும் அச்சமற்றும் இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு திசையிலிருந்தும் தடையின்றி வந்து கொண்டிருந்தன. இந்நிலைமையில் (அவ்வூர் வாசிகள் அல்லாஹ்வை நிராகரித்து) அல்லாஹ்வுடைய அருட்கொடைகளுக்கு(ம் நன்றி செலுத்தாமல்) மாறு செய்தனர். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களின் காரணமாக அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு உடையாக அணிவித்து அவர்கள் அதைச் சுவைக்கும்படிச் செய்தான்.

தஃப்ஸீர்

16.112. அல்லாஹ் ஒரு ஊரை - மக்காவை - உதாரணமாகக் கூறுகிறான். மக்காவைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் போது அங்கு வசிப்பவர்களோ அச்சமின்றி பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரம் எல்லா இடங்களிலிருந்தும் இலகுவாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களோ அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொண்டார்கள். எனவே அவர்கள் பொய்பித்து நிராகரித்ததன் காரணமாக அல்லாஹ் அவர்களை அவர்களின் உடம்பில் மெலிவை ஏற்படுத்தும் கடும் பசியாலும் கடும் பயத்தாலும் தண்டித்தான். அவர்கள் அசய்துகொண்டிருந்த நிராகரிப்பான காரியங்களினால் பசியும், பயமும் அவர்கள் அணியும் ஆடையைப் போல் அவர்களுக்கு ஆகிவிட்டன.