ٱعۡلَمُوٓاْ أَنَّمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا لَعِبٞ وَلَهۡوٞ وَزِينَةٞ وَتَفَاخُرُۢ بَيۡنَكُمۡ وَتَكَاثُرٞ فِي ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَوۡلَٰدِۖ كَمَثَلِ غَيۡثٍ أَعۡجَبَ ٱلۡكُفَّارَ نَبَاتُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصۡفَرّٗا ثُمَّ يَكُونُ حُطَٰمٗاۖ وَفِي ٱلۡأٓخِرَةِ عَذَابٞ شَدِيدٞ وَمَغۡفِرَةٞ مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٞۚ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ ٢٠
20. (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும்தான். தவிர உங்களுக்கிடையில் ஏற்படும் வீண் பெருமையும், பொருளிலும் சந்ததியிலும் அதிகரிக்க வேண்டுமென்ற வீண் எண்ணமும்தான். (இதன் உதாரணமாவது:) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிகளுக்குக் களிப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகிவிடுவதை நீர் காண்கிறீர். (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது.) மறுமையிலோ (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (பலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமே தவிர வேறில்லை.
தஃப்ஸீர்
57.20. அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை உடல்களுக்கான விளையாட்டும் உள்ளங்களுக்கான வேடிக்கையும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளும் அலங்காரமும் உங்களிடையே அதிகமான செல்வங்களை, குழந்தைகளை, இன்பம், ஆட்சியதிகாரத்தைக்கொண்டும் பெருமையடிப்பதுமாகும். அதற்கு உதாரணம் மழையைப் போன்றதாகும். அதனால் விளையும் பயிர்கள் விவசாயியை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றன. பின்னர் அப்படியே இருக்காமல் இந்த பசுமையான பயிர்கள் காய்ந்துவிடுகின்றன. -பார்ப்பவனே!- பசுமையாக இருந்ததன் பின் மஞ்சள் நிறமாகி விடுவதை நீ காண்கின்றாய். பின்னர் அல்லாஹ் அவற்றை குப்பை கூளங்களாக்கி விடுகின்றான். மறுமையில் நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கடுமையான வேதனையும் நம்பிக்கைகொண்ட அல்லாஹ்வின் அடியார்களின் பாவங்களுக்கு மன்னிப்பும் அவனது திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்க்கை நிலையற்ற அழியக்கூடிய பொருளேயன்றி வேறில்லை. யார் மறுமையின் இன்பங்களைவிடுத்து அழியக்கூடிய இவ்வுலக வாழ்வை தேர்ந்தேடுத்துக் கொண்டாரோ அவர்தான் ஏமாற்றத்திற்கும் இழப்பிற்கும் உள்ளானவர் ஆவார்.