أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقۡسَمۡتُمۡ لَا يَنَالُهُمُ ٱللَّهُ بِرَحۡمَةٍۚ ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ لَا خَوۡفٌ عَلَيۡكُمۡ وَلَآ أَنتُمۡ تَحۡزَنُونَ ٤٩
49. (அல்லாஹ் நிராகரித்தவர்களை அழைத்து சிகரவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘அல்லாஹ் அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தீர்களே அவர்கள் (இதோ சிகரத்தில் இருக்கும்) இவர்கள் அல்லவா?'' (என்று கூறுவான்). (பிறகு, சிகரவாசிகளை நோக்கி) ‘‘நீங்கள் சொர்க்கம் சென்றுவிடுங்கள். உங்களுக்கு எவ்வித பயமுமில்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்'' (என்று அல்லாஹ் கூறுவான்).
தஃப்ஸீர்
7.49. நிராகரிப்பாளர்களைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் கூறுவான்: “இவர்களைக் குறித்துதானே ‘அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரியவே மாட்டான்’ என்று சத்தியம் செய்து கூறினீர்கள்.” நம்பிக்கையாளர்களிடம் அல்லாஹ் கூறுவான்: “நம்பிக்கையாளர்களே! நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடுங்கள். எதிர்காலத்தை எண்ணி உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. உங்களுக்குக் கிடைக்கும் நிரந்தமான இன்பத்தினால் உங்களுக்குத் தவறிய உலக பாக்கியங்களுக்காக நீங்கள் கவலையடையவும் மாட்டீர்கள்.”