وَلَا تَنكِحُواْ ٱلۡمُشۡرِكَٰتِ حَتَّىٰ يُؤۡمِنَّۚ وَلَأَمَةٞ مُّؤۡمِنَةٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكَةٖ وَلَوۡ أَعۡجَبَتۡكُمۡۗ وَلَا تُنكِحُواْ ٱلۡمُشۡرِكِينَ حَتَّىٰ يُؤۡمِنُواْۚ وَلَعَبۡدٞ مُّؤۡمِنٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكٖ وَلَوۡ أَعۡجَبَكُمۡۗ أُوْلَٰٓئِكَ يَدۡعُونَ إِلَى ٱلنَّارِۖ وَٱللَّهُ يَدۡعُوٓاْ إِلَى ٱلۡجَنَّةِ وَٱلۡمَغۡفِرَةِ بِإِذۡنِهِۦۖ وَيُبَيِّنُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ٢٢١
221. (நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண் அவளைவிட நிச்சயமாக மேலானவள். (அவ்வாறே) இணை வைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும்வரை அவர்களுக்கு (நம்பிக்கையாளர்களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைத்து வணங்கும் ஓர் ஆண் உங்களைக் கவரக்கூடியவனாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமை அவனைவிட நிச்சயமாக மேலானவன். (இணைவைக்கும்) இவர்கள் எல்லாம் நரகத்திற்கு அழைப்பார்கள். ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கிறான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன் வசனங்களை (மேலும்) விவரிக்கிறான்.
தஃப்ஸீர்
2.221. அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் பெண்களை -அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்வரை - மணமுடிக்காதீர்கள். அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்ட அடிமைப்பெண் சிலைகளை வணங்கும் சுதந்திரமான பெண்ணைவிடச் சிறந்தவளாவாள், அவள் அழகாலும் செல்வத்தாலும் உங்களைக் கவர்ந்தபோதிலும் சரியே. அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் ஆண்களுக்கு முஸ்லிமான பெண்ணை மணமுடித்துக் கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்ட ஆண் அடிமை இணைவைக்கும் சுதந்திரமானவனை விடச் சிறந்தவனாவான், அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. இந்த இணைவைக்கும் ஆண்களும் பெண்களும் தங்களின் சொல்லாலும் செயலாலும் நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லும் விஷயங்களின்பால் அழைக்கிறார்கள். அல்லாஹ், சுவனத்தில்பால் இட்டுச் செல்லும் நற்செயல்களின் பக்கமும், தனது அருளினால் பாவங்களை மன்னிப்பதன் பக்கமும் அழைக்கிறான். மக்கள் அல்லாஹ்வின் வசனங்களிலிருந்து படிப்பினை பெற்று அதன்படி செயல்படுவார்கள் என்பதற்காக அவன் அவர்களுக்கு தன் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.